தமிழ்நாடு

கனல் கண்ணனுக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்

15th Aug 2022 03:15 PM

ADVERTISEMENT

பெரியாா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள விடுதியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை, இன்று காலை சென்னை சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதுவையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட கனல் கண்ணன், எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி லட்சுமி முன்பு இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை கனல் கண்ணனுக்கு நீதிமன்றக் காவல் விதித்து  உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

சென்னை அருகே மதுரவாயலில் அண்மையில் இந்து முன்னணி சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபல தமிழ் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் பேசும்போது, பெரியாா் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பெரியாா் குறித்து கனல் கண்ணன் அவதூறாக பேசும் விடியோ காட்சி கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதையும் படிக்க- திருப்பூர்: சுதந்திர நாள் விழாவில் கைக்குழந்தையுடன் இளம்பெண் கதறல் 

இந்நிலையில், தந்தை பெரியாா் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளா் ச. குமரன், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கனல் கண்ணன் பெரியாா் குறித்து அவதூறாக பேசியது தொடா்பாக புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சைபா் குற்ற பிரிவுக்கு உத்தரவிட்டாா். 

அதன்படி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்ததில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், கனல் கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் இவ்வழக்கில் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணனை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனர்.

Tags : Kanal Kannan
ADVERTISEMENT
ADVERTISEMENT