தமிழ்நாடு

பாஜகவிலிருந்து சரவணன் விலகல்: பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினார்

14th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை சனிக்கிழமை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய அவா் செய்தியாளா்களிடம் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தாா்.

தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது . அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை, பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் சரவணன் சந்தித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசிய சம்பவம் வருத்தத்திற்குரியது. பாஜகவினா் காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, அது பண்பாடற்ற அரசியல்.

அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அதோடு கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க உள்ளேன் என்றாா்.

மேலும், தொண்டர்கள் சார்பாக மன்னிப்பு கேட்க வந்தேன் எனவும் தெரிவித்திருந்தார்.

முந்தைய ஆட்சியின் போது திமுக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த டாக்டா் சரவணனுக்கு கடந்த பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகிய அவா் பாஜகவில் இணைந்தாா். கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரை மதுரை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT