தமிழ்நாடு

இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் நிறுத்தம்: அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டது

13th Aug 2022 01:51 PM

ADVERTISEMENT


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் சனிக்கிழமை முற்றிலுமாக நின்றதை அடுத்து தமிழக பொதுப்பணித்துறையினர் அனைத்து மதகுகளையும் அடைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது, ரூல் கர்வ் நடைமுறை படி அணையில் நீர்மட்டம் உயராமல், கேரளம் மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் செல்லும் வகையில், ஆக.5 இல் மதகுகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது.

உபரி நீர் நின்றது
பின்னர், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் தானாகவே உபரிநீர் குறையத் தொடங்கியது, இதனால் உபரிநீர் செல்லும் மதகுகள் அடைக்கப்பட்டது. இறுதியாக வெள்ளிக்கிழமை வினாடிக்கு 316 கன அடியாக, இரண்டு மதகுகள் வழியாக சென்ற நிலையில், சனிக்கிழமை உபரி நீர் நின்றது. இதன் காரணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இடுக்கி அணைக்கு உபரி நீர் செல்லும் 2 மதகுகளையும் அடைத்தனர், மொத்தம் உள்ள 13 மதகுகளில் கடந்த சில நாள்களாக உபரிநீர் குறைவாக சென்றதால் ஒவ்வொரு மதகாக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மதுரை விமான நிலையத்தில் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு

அணை நிலவரம்
சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 6,660 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு, 2,770 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,194 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

அலங்காரத்தில் அணை
75 ஆவது சுதந்திர நாளையொட்டி முல்லைப் பெரியாறு அணையினுடைய பிரதான அணையில் தேசியக் கொடி நிறத்தில் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கம்பத்தில் உள்ள சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT