தமிழ்நாடு

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி-லாரி நேருக்கு நேர் மோதி தீ விபத்து: உடல் கருகி 2 பேர் பலி

11th Aug 2022 08:28 AM

ADVERTISEMENT

 

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் தீயில் கருகி பலியாகினர். சுமார் 2 மணி நேரம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகர்கோயில் அருகே உள்ள வள்ளியூருக்கு, அரியலூரிலிருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதன்கிழமை இரவு புறப்பட்டுள்ளது. லாரி, மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. 

இந்நிலையில், திருச்சி பிஎச்இஎல் (பெல்) தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை பொருள்கள் இறக்கிவிட்டு வந்துக்கொண்டிருந்த இரண்டு லாரிகள் போட்டிப்போட்டுக் கொண்டு வந்துகொண்டிருந்த போது ஒன்றோடு ஒன்று உரசியதில் ஒரு லாரி மாற்று சாலைக்கு சென்று சிமென்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு லாரிகளும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. 

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதையும் படிக்க | ‘ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை’

இந்த விபத்தில் காற்றாலை லாரியில் வந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர்(கிளீனர்) இருவரும் தீயில் உடல் கருகி பலியாகினர். 

சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கருகிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் நள்ளிரவில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

லாரியில் தீயில் கருகி இறந்தவர்கள் லாரி ஓட்டுநர் உத்திரப்பிரதேசம் மாநிலம் டிகைடா பகுதியினை சேர்ந்த இந்திராமணிபால் என்பதும், கிளீனர் அதே மாநிலம் பிரதாப்கர் பகுதியினை சேர்ந்த பவன்பட்டேல் என்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT