தமிழ்நாடு

இபிஎஸ் ஊழலே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

11th Aug 2022 02:46 PM

ADVERTISEMENT


எடப்பாடி பழனிசாமி ஊழலே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. திமுக ஆட்சியில் 20 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டா வரட்டும் பார்க்கலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூரில் வியாழக்கிழமை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது . இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: 
தமிழகத்தில் தற்போது பொதுமக்கள்  போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக அதிகமாக குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில சமூக விரோதிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு மாணவர்கள் அடிமையாகியுள்ளனர்.  இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும். பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் போதிய அளவில் விழிப்புணர்வு வேண்டும். போதை பொருள்களை தடுக்க பொதுமக்களும் முன்வர வேண்டும் என துரைமுருகன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் துரைமுருகன், வருங்கால சந்ததியினரை பாதுகாக்க, போதைப் பொருள்களின் தடுப்புப் பணிக்காக கட்சிப் பாகுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் போதைப் பொருள்களை தடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காவல்துறையினர் போதைப் பொருள்களை முழுவதுமாக தடுக்க வேண்டும் என துரைமுருகன் கூறினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது!

வேலூரில் சாலைகளை போடும்போது, சாலையில் உள்ள அடி பம்ப் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அப்படியே வைத்து சாலை போடுகிறார்களே? என செய்தியாளர்களின் கேள்விக்கு, வேலூரில் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது அதிமுக ஆட்சியில், ஒப்பந்தம் எடுத்தவர் அதிமுகவைச் சேர்ந்தவர். ஒப்பந்ததாரா் போதிய அனுபவமும் தகுதியும் இல்லாதவர். சட்டப்படி அவருக்கு உரிமை கிடையாது. கடைவீதியில் காய்கறி விற்பனை செய்தவரிடம் பெரிய  அளவிலான ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது. சாலைகளை எப்படி போட வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

திட்டப் பணிகளில் அலட்சியம் காட்டியதாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் பணி ஆணையை ரத்து செய்து மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் 20 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களுடைய ஊழலே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. வரட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

பேரவையில் ஒரு முறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் இன்னும் நிலுவையில் வைத்துள்ளார். எனவே, நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை, சட்டத்தை அறிந்து கையெழுத்துட்டு உடனடியாக அனுப்புவார் என எதிர்பார்க்கின்றோம் என  அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT