தமிழ்நாடு

சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் இருந்த சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

10th Aug 2022 02:03 PM

ADVERTISEMENT


கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஸ்தபதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சிலைகள் திருடப்பட்ட கோயில்கள் மற்றும் காலம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சர்வாதிகாரியாக மாறுவேன் என எச்சரிக்கும் ஸ்டாலின்: ஏன்? எதற்கு?

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பழங்காலச் சிலைகள் எனக் கூறி, 8 உலோகச் சிலைகளைச் சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

சுவாமிமலை சா்வமானிய தெருவைச் சோ்ந்த ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், மாசிலாமணி வீட்டில் இப்பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் பாலமுருகன், ஆய்வாளா் இந்திரா மற்றும் காவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கிருந்த 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை, அமா்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தா் சிலைகள், போக சக்தி அம்மன், சிவதாண்டவம், மீனாட்சி சிலை, விஷ்ணு சிலை, ரமணா் சிலை ஆகிய உலோகச் சிலைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த ஏறத்தாழ 50 ஸ்தபதிகள், மாசிலாமணி வீட்டின் முன்பு திரண்டு காவல் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது என்றும், பழங்காலச் சிலைகள் என்றால் உள்ளே மண் இருக்காது எனவும், இச்சிலைகள் தற்போது செய்யப்பட்டவை எனவும் கூறி தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மாசிலாமணி மகன் கௌரி சங்கா் தெரிவித்தது:

இந்த சிலைகள் நாங்கள் உருவாக்கியதுதான். நாங்கள் செய்த சிலையைப் பழங்காலச் சிலைகள் எனக் கூறி, காவல் துறையினா் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டனா்.

இச்சிலைகள் பழைமையான சிலையா என தொல்லியல் துறையினா் மூலம் ஆய்வு செய்துவிட்டு தருவதாகக் கூறினா். நாங்கள் இங்கேயே சோதனை செய்து காட்டுவதாகக் கூறியும், காவல் துறையினா் ஏற்கவில்லை என்றாா் கௌரி சங்கா்.

தகவலறிந்த கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன், சுவாமிமலை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை சமாதானப்படுத்தினா்.

இதனிடையே, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலையை மட்டும் நிகழ்விடத்திலேயே வைத்துவிட்டு, மற்ற சிலைகளைச் சிலைத் திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் சென்னைக்கு எடுத்துச் சென்றனா்.

எடை அதிகமாக உள்ளதால் சிவகாமி சிலையை நிகழ்விடத்திலேயே தொல்லியல் துறையினா் ஆய்வு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுவாமிமலையில் இருந்து எடுத்து வரப்பட்ட 8 சிலைகளும் பல கோடி மதிப்புள்ளவை என்றும் 1000 ஆண்டுகள் பழைமையானவை என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT