தமிழ்நாடு

மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்: கோவை சம்பவம் குறித்து மா. சுப்ரமணியன் விளக்கம்

10th Aug 2022 05:41 PM

ADVERTISEMENT

 

மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கோவை ஐஸ்கிரீம் கடை சீல் வைக்கப்பட்டு, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதை பொருட்கள் தடுப்பு மாநாட்டிற்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  செய்தியாளர்களை சந்தித்தார்.

மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,  இன்று காலை தொடங்கி பிற்பகல் வரை தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு, அதை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. 

ADVERTISEMENT

கடந்த ஆட்சி காலத்தில் போதை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் இத்தகைய போதை பொருட்கள் எளிதாக கிடைத்தது. தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இதனை கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தயார் செய்யவில்லையென்றாலும் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கவே, போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பான மாநாடு இன்று நடத்தப்பட்டது.

சமூக வளைதளங்களின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் அவினாசி ரோட்டில் இயங்கி வந்த ரோலிங் டாஃப் கபே எனும் ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பதாக எனது கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக உடனடியாக ஆய்வு மேற்கொள்ளும்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அக்டோபர் 21, 2021 அன்று அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புகையிலை மற்றும் நிகோடினை கலந்த உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு கடந்த 23.05.2013 முதல் அமல்படுத்தி, அதனை வருடந்தோறும் நீட்டித்து வருகிறது. அதனடிப்படையில் 23.05.2022 முதல் இத்தடை ஆணையை ஓராண்டு நீட்டித்து உணவுப்பாதுகாப்பு துறை உத்திரவிட்டுள்ளது. உணவுப்பாதுகாப்பு துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை கலந்த உணவுப்பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு ஜுன் மாதம் வரை சுமார் ரூ.38.99 கோடி மதிப்புள்ள 952.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது. நமது அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஆண்டு ஜுன் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் மீது காம்பவுண்ட் அஃபென்ஸ் என்னும் தலைப்பின்கீழ் 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஜுன் வரை ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஜுன் மாதம் வரை ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 75 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 2013 ஆண்டு முதல் 2022 ஆண்டு ஜுன் வரை சுமார் 1308 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 1093 மாதிரிகள் தரமற்றதாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் இடப்பட்டதாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் ரூபாய் 58.22 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மேற்கொள்ள வேண்டிய உறுதி மொழிகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT