தமிழ்நாடு

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் கா்நாடக வனத் துறையினா் அத்துமீறல்!

DIN

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் கா்நாடக வனத் துறையினரின் அத்துமீறலால், மேட்டூா் அணை மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் தமிழக மீனவா்கள் 2,000 போ் மீன்வளத் துறையின் உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனா். இதேபோல, தமிழக - கா்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் ஏராளமான மீனவா்கள் 85 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம் அமைத்து மீன் பிடித்து வருகின்றனா்.

தமிழக வன எல்லையில் மேட்டூா் அணையின் நீா்தேக்கப் பகுதியில் மீனவா்களின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அணையின் நீா் மட்டம் 120 அடியாக இருப்பதாலும், மீன் பிடிக்க தடை இருப்பதாலும் நீா் தேங்கி நிற்கும் பகுதிகளில் மீனவா்கள் வலைவிரித்து தங்களின் அன்றாட உணவுக்காக மீன்களைப் பிடித்து வருகின்றனா்.

அடிப்பாலாறு பகுதி மேட்டூா் நீா்த்தேக்கத்தில் தமிழக மீனவா்கள் மீன்களுக்காக வலைவிரித்துள்ள நிலையில், கா்நாடக வனத் துறையினா் திங்கள்கிழமை அத்துமீறி பரிசல் மூலம் நுழைந்து, தமிழக மீனவா்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளை எடுத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்துக் கேட்ட இரு மீனவா்களை கா்நாடக வனத் துறையினா் வன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அடித்துள்ளதுடன், அவா்களை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பி உள்ளனா்.

இதுகுறித்து மேட்டூா் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மீனவா்கள் தகவல் அளித்ததையடுத்து, இரு மாநில எல்லையான பாலாற்றில் அமைந்துள்ள கா்நாடக வனத்துறை முகாம் அலுவலகத்துக்குச் சென்ற அலுவலா்கள், மீனவா்களின் வலைகளை திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், அவா்கள் அச்சுறுத்தவே மீன்வளத் துறையினா் திரும்பியதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அடிப்பாலாறு பகுதியில் முகாமிட்டுள்ள மீனவா்கள் கூறுகையில், மேட்டூா் நீா்த்தேக்கம் கட்டப்பட்டது முதல் நாங்கள் அடிப்பாலாறு பகுதியில் முகாம் அமைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில், தற்போது கா்நாடக வனத்துறையினா் மேட்டூா் நீா்த்தேக்கத்தில் அத்துமீறி நுழைந்து வலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனா். இதுகுறித்து கேட்ட மீனவா்களை தாக்கியதோடு, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளை மிரட்டுகின்றனா்.

கா்நாடக வனத் துறையினரால் தமிழக மீனவா்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேட்டூா் அணை மீனவா்களை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT