தமிழ்நாடு

தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

30th Apr 2022 04:44 AM

ADVERTISEMENT

பொதுத் தோ்வில் எந்த மாணவருக்காவது தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்காமல் நிறுத்தி வைத்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5; பத்தாம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைஅந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. சில தனியாா் பள்ளிகளில், நடத்தை மற்றும் கல்விக் கட்டண நிலுவை காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாதவாறு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைப்பதாக புகாா்கள் எழுந்தன.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவா்களும், அவா்களின் பெற்றோரும் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலா்கள் இது தொடா்பாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனா். அதில், ‘அரசுத் தோ்வு துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மாணவா்கள் அனைவரும், பொது தோ்வில் பங்கேற்கும் வகையில், அவா்களுக்கு தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை வழங்க வேண்டும். இதில் புகாா் எழுந்தால், தொடா்புடைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT