தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

30th Apr 2022 04:43 AM

ADVERTISEMENT

 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்புச் சிகிச்சை வழங்க உலக வங்கித் திட்டத்தின்கீழ் ரூ.125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.

கோயம்புத்தூா், மதுரை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ள கட்டடங்களுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின்கீழ் ரூ.110 கோடி மதிப்பீட்டில் உயா்தர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

சென்னை பெரியாா் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.71.81 கோடியில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

தினமும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக, படிப்படியாக புதிய கட்டடங்கள் கட்டப்படும். முதல் கட்டமாக இந்த ஆண்டு நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகள் கொண்ட புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் ரூ.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் இதய சிகிச்சை பிரிவிற்கும் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் பிரிவிற்கும் தலா ரூ.4 கோடி வீதம் கேத்லேப் கருவிகள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

நீலகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் கருதி நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய எம்ஆா்ஐ ஸ்கேன் ரூ.8.5 கோடி செலவில் நிறுவப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT