தமிழ்நாடு

தேர்த் திருவிழா விபத்தில் 11 பேர் பலியானது தாங்க முடியாத துயரம்: ஸ்டாலின்

27th Apr 2022 05:54 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்திகளை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தஞ்சாவூர்  அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த தேர்த் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்தது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.   தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். வருவாய்த் துறை முதன்மைச் செயலர் ஜெயந்த் குமார் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற துயரமான சம்பவங்களின் போது அரசியல் செய்ய விரும்பவில்லை. 11 பேரின் குடும்பங்களின் துயரில், மண்ணின் மைந்தன் என்ற முறையில் நானும் பங்கேற்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ADVERTISEMENT

முன்னதாக, தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில், தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் புறப்பட்டார். 

அங்கு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், கோர விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியையும் வழங்கினார்.

பிறகு, விபத்தில் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம்  (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13) ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT