தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

14th Apr 2022 11:18 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலையில்   அம்மனும் சுவாமியும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமையும், திக்கு விஜயம் புதன்கிழமையும் நடைபெற்றது. 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் புதன் கிழமை காலை 10.35 முதல் 10.59-க்குள் நடைபெற்றது.

திருக்கல்யானத்தையொட்டி  நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் ஏழு வகை மலர்களால் திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும்  மணமேடையில் எழுந்தருளினர்.

இதனையடுத்து சுந்தரேசுவரர் சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி மேடையில் காட்சி தந்தனர். விநாயகர் வழிபாடு செய்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன‌. 

இதைத்தொடர்ந்து பாலிகை இடும் நிகழ்ச்சியும் நடைபெற்று சுவாமி அம்பாள் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி சார்பிலும் மீனாட்சியம்மன் சார்பிலும் கோயில் பட்டர்கள் பிரதிநிதிகளாக இருந்து மாலை மாற்றும் வைபவமும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து மங்கள  வாத்தியங்கள் முழங்க திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் பக்திகோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் காலை 10.35 மணி மணி முதல் 10.59மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவின் பாதுகாப்பிற்காக 3,500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சர்பிலும் மதுரை மாநகராட்சி சார்பிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து  சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து நடைபெற்றது. சித்திரை , ஆடி வீதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் கல்யாண மொய் வசூல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி அம்மன் பெயரில் பொய் பணம் செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT