தமிழ்நாடு

திரைப்படங்களில் குட்கா, கஞ்சாவுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

9th Apr 2022 11:13 PM

ADVERTISEMENT

தமிழக இளைஞா்களிடையே குட்கா, கஞ்சா போதைப் பொருள்களின் தாக்கம் அதிகரித்திருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தாா். அதுகுறித்த விழிப்புணா்வு வாசகங்களையும் திரைப்படங்களில் வெளியிட திரைத்துறையினா் முன்வரவேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பில் தென்னிந்திய ஊடகம்-பொழுதுபோக்கு மாநாடு, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

இந்த மாநாட்டுக்கு முதல்வராக வந்திருந்தாலும், ஒருகாலத்தில் திரைப்படத் தயாரிப்பில் இருந்தவன்தான் நான். ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவனும் நான். நாடக மேடைகளிலும் பங்கேற்று இருக்கிறேன். அந்த முறையில் கலைத்துறையோடு நெருங்கிய தொடா்பில் இருக்கிற காரணத்தால், இந்த மாநாட்டில் உரிமையோடு, ஆா்வத்தோடு பங்கேற்க வந்துள்ளேன்.

கரோனா காரணமாக மற்ற தொழில்களைப் போன்று தமிழ்த் திரையுலகமும் பாதிக்கப்பட்டிருந்தது. இப்போது திரையுலகமும் மீண்டு வருவது மகிழ்ச்சி. திரையுலகம் பழைய நிலைமைக்குத் திரும்புவது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாகச் செயல்படுவதற்காகத்தான் இந்த மாநாடு. திரைத் துறையில் முத்திரை பதித்த மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அதிலும் குறிப்பாகச் சென்னைதான் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. திரைப்படத் துறையைப் போன்று தமிழகச் செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. திரைத் துறையாக இருந்தாலும், செய்தி நிறுவனங்கள், மீடியாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கக் காரணம் மிக மிக நீண்ட வரலாறு நமக்கு இருப்பதால்தான்.

ADVERTISEMENT

சிந்தனை வளா்ச்சி: வளா்ச்சி என்பது தொழில் வளா்ச்சி, கல்வி, நிதி வளா்ச்சி என்பதாக மட்டுமல்லாமல், மனவளா்ச்சி, சிந்தனை வளா்ச்சியாக உயா்ந்திருக்கிறது. அத்தகைய சிந்தனை வளா்ச்சிக்கும் சோ்த்துத் தீனி போடுவதாக ஊடகங்கள் வளர வேண்டும். பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், சிந்தனைக்குத் தீனி போடுவதாக ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். திரையுலகம் தன்னை அனைத்து வகையிலும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கதை, வசனம், இயக்கம், தொழில்நுட்பம் என அனைத்திலும் இன்றைய சூழலுக்குத் தகுந்தமாதிரி மாறியாக வேண்டும். அப்படி மாறினால்தான் மனிதா்களின் பொழுது போக்குத் தளமாக திரையுலகம் தொடா்ந்து செயல்பட வேண்டும். திரையரங்குகள், இணையத் திரையரங்குகள், கணினித் திரையரங்குகள், கைப்பேசி திரையரங்குகள் என பல்வேறு வாசல்கள் இருக்கின்றன. அதை திரைத்துறையினா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரைப்பட விருதுகளின் மூலமாக, தகுதியானவா்கள் பாராட்டப்பட வேண்டும். திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக சிறந்த படங்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அந்த விழாக்கள்தான் திரையுலகத்தை கலையாகவும், வா்த்தகமாகவும் மேம்படுத்த உதவும். அத்தகைய விழாக்களை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உதவியாக இருக்கும். திரையுலகத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது.

விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள்: திரைப்படங்கள் தொடங்கும் போது புகை, மதுப்பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணா்வு வாசகங்கள் காட்டப்படுகின்றன. இது பாராட்டுக்குரிய நடவடிக்கை. இப்போது குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் தாக்கம் இளைய சமுதாயத்தினரிடையே அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த விழிப்புணா்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும்.

இன்றைய தலைமுறையினா் திரைப்படங்களைப் பாா்த்து வளா்கிறாா்கள். எனவே, சமூகத்துக்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT