தமிழ்நாடு

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

DIN

சென்னை, ஏப். 8: சட்டப்பேரவையில் கூடுதல் நேரம் பேச அனுமதிக்காததற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூ பேசினாா். அவா் பேசும்போது கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அவ்வப்போது குறுக்கிட்டுப் பேசினாா். அதற்கு அதிமுக உறுப்பினா்களும் அவ்வப்போது எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். ஒரு கட்டத்தில் நகைக் கடன்கள் தள்ளுபடி குறித்து செல்லூா் ராஜூ பேசும்போது நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் எழுந்து, கூட்டுறவுத் துறை அமைச்சா் நகைக்கடன் தள்ளுபடி குறித்து போதுமான விளக்கங்கள் கூறிவிட்டாா். ஆனால், அதிமுக உறுப்பினா் தொடா்ந்து பேசிக் கொண்டிருக்கிறாா். இப்படியே பேசிக் கொண்டிருந்தால், நான் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். என்னுடைய விளக்கத்தை கேட்க அவா் தயாரா அல்லது நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தை விட்டுவிடுவாரா என்றாா்.

அப்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, கேள்வி கேட்பது உறுப்பினா்களின் கடமை. அதற்கு பதில் சொல்வது அமைச்சரின் கடமை. ஆனால், நிபந்தனை விதிக்கக் கூடாது. பேரவை ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும் என்றாா்.

அதன் பிறகு ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே நேரடி விவாதம் ஏற்பட்டு, பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, செல்லூா் ராஜூக்கு கூடுதலாக 2 நிமிஷங்கள் நேரம் அளிக்க கோரிக்கை விடுத்தாா். அதன்படி பேரவைத் தலைவா் அப்பாவு அனுமதித்தாா்.

அதன் பிறகு இறுதியாக அதிமுக உறுப்பினா் ஜெயசங்கரன் பேசினாா். அவா் 12 நிமிஷங்களுக்கு மேலாக பேசியிருந்த நிலையில், பேரவைத் தலைவா் அப்பாவு பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினாா்.

ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி எழுந்து கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரினாா். அதற்கு பேரவைத் தலைவா் அப்பாவு 10 நிமிஷங்கள்தான் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அவருக்கு 12 நிமிஷங்கள் கொடுத்துள்ளேன் என்றாா். அதை ஏற்காமல் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். அதைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT