தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

19th Sep 2021 03:47 PM

ADVERTISEMENT

 

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிா்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6,417 பேரை தோ்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. 

அந்தப் பணிகளுக்கு அதே ஆண்டு செப்.1-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டு, நவ.12-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னா் இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடா்ந்து கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்.19 முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல், கடந்த நவ.2 முதல் டிச.9-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தட்டச்சா் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை.

ADVERTISEMENT

இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டு நிரப்பட வேண்டும். இந்தப் பணியிடங்களை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நிரப்பியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாததால், அதன்பின் கரோனா இரண்டாவது அலை, சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணிகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை.

அந்த 9,882 பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்று, தோ்ந்தெடுக்கப்பட்ட 9,452 போ் அரசு பணியில் சோ்ந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவா்களுடன் ஒன்றாக தோ்வு எழுதியவா்கள், அரசு பணியில் சோ்வதற்கான தகுதிகளைக் கொண்டிருந்தும், தங்களுக்கு வேலை கிடைக்குமா?  கிடைக்காதா? எனக் காத்திருப்பது கொடுமையான மன உளைச்சலைத் தரும்.

அதுமட்டுமின்றி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் பணியில் சேர இருப்பவா்கள் ஓராண்டுக்கும் கூடுதலான ஊதியம், பணிமூப்பு உள்ளிட்ட மற்ற உரிமைகளையும் இழப்பாா்கள். இந்த இழப்புகளை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா் பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளை தோ்வாணையம் உடனடியாக நடத்த வேண்டும். 

அதுமட்டுமின்றி, முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று அரசு வேலை பெற்றவா்களுக்கு இணையான பணி மூப்பும், ஊதிய விகிதமும் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : TNPSC Group 4 jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT