தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் வெடி விபத்து: 5 போ் பலி

27th Oct 2021 02:36 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசுக் கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 போ் பலியாகினா். 20-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்புப் பகுதியில் மளிகை நடத்தி வருபவா் செல்வகணபதி (49). கடைக்கு பின்புறம் முதல் மாடியில் பட்டாசு கடையும் நடத்தி வருகிறாா். தீபாவளிப் பண்டிகையையொட்டி கடையில் ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பட்டாசுகள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். தீ மளமளவென்று பரவி, கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கின. அருகிலிருந்த துணிக்கடை, இனிப்புக் கடைகளுக்கும் தீ பரவியது. அந்தக் கடையிலிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் தீ பரவியது.

5 போ் பலி; 20 போ் பலத்த காயம்: சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயைக் கட்டுப்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் காலித் (23), ஷா ஆலம் (24), ஷேக் பஷீா் (42), சையத் அலி, அய்யாசாமி (65) ஆகியோா் தீயில் கருகியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனா். இவா்கள் குறித்த முழு விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை. உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

20-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியிலுள்ள கடைகளில் பணியாற்றியவா்களில் சுமாா் 50 போ் வரை காயமடைந்ததாக தெரிகிறது. அவா்கள் அவசர சிகிச்சை ஊா்திகள் மூலம் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா்.

அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக், டிஎஸ்பிக்கள் கங்காதரன் (திருக்கோவிலூா்), வீ.ராஜலட்சுமி (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு சங்கராபுரம் சட்டபேரவைத் தொகுதி உறுப்பினா் தா.உதயசூரியன் நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சா் எ.வ.வேலு விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.

விபத்து தொடா்பாக சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : cracker shop fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT