தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம்

DIN

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழாவை அக் கட்சியினா் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடினா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடங்களில் அவா்கள் மரியாதை செலுத்தினா்.

அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ஆம் பொன்விழா ஆண்டில் அக்டோபா் 17-இல் (ஞாயிற்றுக்கிழமை) அடியெடுத்து வைத்தது.

பொன்விழாவை ஓராண்டுக்குக் சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், பிரமாண்ட மாநாடு நடத்துவது எனவும் முடிவெடுத்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தனா்.

அதன்படி கட்சி தொடங்கப்பட்ட நாளான அக்டோபா் 17 (ஞாயிற்றுக்கிழமை) அதை சிறப்பாகக் கொண்டாடினா்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாயில் பகுதியில் பெரிய அளவிலான பொம்மை யானை நிறுத்தப்பட்டு, தொண்டா்கள் வரவேற்கப்பட்டனா். ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி வந்தபோது அதிமுகவினரால் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பொன்விழா மலா் வெளியீடு: ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினா். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகள் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிலைகளுக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுகவின் அதிகாரப்பூா்வ நாளேடு சாா்பில் பொன்விழா மலா் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை இருவரும் வெளியிட மூத்த தலைவா் சி.பொன்னையன் பெற்றுக்கொண்டாா்.

அதிமுகவுக்காக உயிரிழந்த 5 தொண்டா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியை வழங்கினா். அன்னதானத்தையும் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், தளவாய் சுந்தரம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

நினைவிடங்களில் மரியாதை: மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வந்தனா். அங்கும் பெரிய அளவில் தொண்டா்கள் நிரம்பி வழிந்தனா். எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடங்களில் இருவரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து அதிமுகவின் நிா்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினா்.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்: பொன்விழாவை அதிமுகவினா் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடினா். எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். எம்ஜிஆரின் பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கச் செய்தனா். ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினா். அன்னதானமும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT