தமிழ்நாடு

வெளிநாடுகளிலிருந்து வந்த 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

DIN

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்று 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. 

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் தொடங்கிவைத்ததையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட லாரிகள், ஆக்சிஜன் தேவையுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: 

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களுக்கு  மிகப்பெரும் பற்றாக்குறையைத் தோற்றுவித்துள்ளது. இவற்றின் அவசரத் தன்மை மற்றும் தவிர்க்கப்பட இயலாத தேவையைக் கருதி, இந்த நெருக்கடியான பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையை சமாளித்திட, சுகாதாரத் துறைக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் உதவிட முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆணைப்படி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) போதிய அளவிற்கான ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவிற்கிணங்கவும், கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும்  3,250 ஓட்ட அளவு உருளைகளையும் 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் 800 ஆக்சிஜன் நிரப்பட்ட உருளைகளையும் என மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்ய ஆணைகள் அளித்துள்ளது. இதுவரை, 515 ஆக்சிஜன் உருளைகளும் 1,780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும் 250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள கருவிகளை கூடிய விரைவில் வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூர் வழங்குநர்களிடமிருந்து  4.33 கோடி ரூபாய் மதிப்பிலான, ஈரப்பதமூட்டியுடன் கூடிய ஓட்டக்கருவிகள் முறைப்படுத்தும் கருவிகள், செப்பு விசைக் குழாய்கள் வெளியேற்றும் குழாய்கள், பலவாயில் குழாய்கள் முதலியனவற்றை, சிப்காட் நிறுவனம் கண்டறிந்து கொள்முதல் செய்து பொதுப்பணித்துறை மருத்துவப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுவரை உயிர்வலி இணைக்கப்படாத 1,000 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும், சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளிலிருந்து, 2,000 காலி ஆக்சிஜன் உருளைகளைத் தருவித்து, அவற்றில் தேவைக்கேற்ப, ஆக்சிஜனை நிரப்பி, கும்மிடிப்பூண்டி மற்றும் தூத்துக்குடி திட்ட அலுவலகங்கள் வாயிலாக, சென்னை மாவட்டத்திற்கு 1010, சிவகங்கை மாவட்டத்திற்கு 130, விழுப்புரம் மாவட்டத்திற்கு 100, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 20, வேலூர் மாவட்டத்திற்கு 100, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 130, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 100, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60, என மருத்துமனைகளுக்கு கரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஆணைகளில், 1,400 ஆக்சிஜன் உருளைகள் சிங்கப்பூரிலிருந்து, விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 1400 ஆக்ஸிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரூர் மாவட்டத்திற்கு 75, தருமபுரி மாவட்டத்திற்கு 75, நீலகிரி மாவட்டத்திற்கு 75, சிவகங்கை மாவட்டத்திற்கு 100, நாமக்கல் மாவட்டத்திற்கு 75, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 75, திருவாரூர் மாவட்டத்திற்கு 75, தேனி மாவட்டத்திற்கு 75, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 75, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 75, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 75, விருதுநகர் மாவட்டத்திற்கு 75, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 75, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 75, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100, கடலூர் மாவட்டத்திற்கு 100, விழுப்புரம் மாவட்டத்திற்கு 75, இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50, என மொத்தம் 1400 ஆக்சிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்வினை முதல்வர் இன்று (26-5-2021) தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, ஊரகத் தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர். பாலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் துறை சிறப்பு செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT