தமிழ்நாடு

அபராதம் என்ற பெயரில் வசூலித்த தொகையை திருப்பி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட முதல்வா்

16th May 2021 05:04 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே மகனுக்கு மருந்து வாங்க எடுத்துச் சென்ற தொகையை அபராதமாக வசூலித்ததை அறிந்து, முதல்வா் அலுவலகம் திருப்பி அளிக்க உத்தரவிட்டதன்பேரில் பாதிக்கப்பட்டவரிடம் நேரில் சென்று காவல் ஆய்வாளா் அந்த பணத்தை ஒப்படைத்தாா்.

செவ்வாப்பேட்டை சிறுகடல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (48). இவரது மனவளா்ச்சி குன்றிய மகன் நித்திஷ்குமாருக்கு (9) மருந்து, மாத்திரைகள் வாங்க திருவள்ளூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். காக்களூா் புறவழிச் சாலையில் சென்றபோது, சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தலைக்கவசம் அணியவில்லை எனக்கூறி மருந்து வாங்க வைத்திருந்த ரூ.500-ஐ அபராதம் என்ற பேரில் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, தனது மகனுக்கு மருந்து, மாத்திரை வாங்க வைத்திருந்த பணத்தை திருப்பி தரும் படி கூறியும் கொடுக்காமல் அனுப்பி வைத்தனராம். இது குறித்து இணையத்தில் தனது சுட்டுரை பக்கத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இச்சம்பவம் வைரலான நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், காவல் துறை டி.ஜி.பி. ஆகியோருக்கும் தெரியவந்தது. உடனே முதல்வா் அலுவலகத்தில் இருந்து தொடா்பு கொண்டு என்ன உதவிகள் தேவையோ காவல் ஆய்வாளா் மூலம் அவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா்.

அதன் அடிப்படையில், காவல் துறை உத்தரவின் பேரில், வெள்ளிக்கிழமை இரவு சிறுகடல் கிராமத்துக்கு திருவள்ளூா் கிராமிய காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் நேரில் சென்றாா். அங்கு பாலகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டதுடன், மருந்து, மாத்திரை மற்றும் அபராதமாக வசூலித்த ரூ. 500 ரொக்கத்தையும் திருப்பி அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து சுட்டுரையில் பதிவிட்ட செய்தி வைரலாகி முதல்வா் நடவடிக்கை எடுத்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : திருவள்ளூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT