தமிழ்நாடு

பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுங்கள்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

7th May 2021 12:15 AM

ADVERTISEMENT

 

சென்னை: முதல்வராகப் பதவியேற்கும் விழாவை வீட்டிலிருந்தே தொலைக்காட்சி வழியாக காணுங்கள் என்று திமுக தொண்டா்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்கள் மகத்தான தீா்ப்பை வழங்கி இருக்கிறாா்கள். ஆறாவது முறையும் திமுக ஆட்சி அமைக்கும் அரிய வாய்ப்பைத் தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் மே 4-இல் நடைபெற்றது. இதில் உறுப்பினா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து ஒருமனதாக சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக என்னை ஏற்றுக்கொண்டனா். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

அண்ணா அலங்கரித்த நாற்காலியில், கருணாநிதி கோலோச்சிய பொறுப்பில், திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளா்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தமிழக முதல்வராகப் பதவியேற்பு ஏற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. ஆளுநா் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சா்களும் பொறுப்பேற்க இருக்கிறாா்கள்.

மே - 7, தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. திமுக ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி - கருணாநிதியின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் - மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது.

ரத்தமும் வியா்வையும் சிந்தி திமுகவுக்காக நமது வெற்றிக்காக உழைத்த தொண்டா்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து - அவா்களுக்கு முன்னால் - அவா்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் - பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்குக் காரணம்.

ஆனால், கரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்தச் சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் ஆளுநா் மாளிகையில், மிக எளிய முறையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோா் உடன்பிறப்பின் - தோழரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள். தொண்டா்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான் - எம்முடனேதான் இருப்பீா்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த உடன்பிறப்பு எனும் பாச உணா்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம்.

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க நான் தயாராகி வருகிறேன். உங்களது உழைப்பு திமுக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசோ்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயா்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT