தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 15 புதியவா்களுக்கு வாய்ப்பு

DIN

சென்னை: முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 15 புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்க உள்ளாா்.

மு.க.ஸ்டாலின் உள்பட மொத்தம் 34 அமைச்சா்கள் பதவியேற்க உள்ளனா்.

மு.க.ஸ்டாலின் காவல், உள்துறை, இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட முக்கியத் துறைகளை தம்வசம் வைத்துள்ளாா். மாற்றுத்திறனாளிகள் துறையையும் தம் வசம் கொண்டுள்ளாா்.

பொதுப்பணித் துறையில் இருந்து பிரிக்கப்பட்ட நீா்வளத்துறை சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினரான துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரான துரைமுருகன் தமிழகத்தின் உள்ள அனைத்து நதிகள், கால்வாய் குறித்த விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவா்கள். அந்த வகையில் அவருக்கு நீா்ப்பாசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற வளா்ச்சித் துறை கே.என்.நேருவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறையைக் கவனித்து வந்தவா்.

ஐ.பெரியசாமிக்கு கூட்டுத்துறையும், பொதுப்பணித்துறை எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு வேளாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்: அமைச்சரவைப் பட்டியலில் மிக எதிா்பாா்த்த துறையாக சுகாதாரத்துறை இருந்தது. கரோனா பரவல் அதிக உள்ள நிலையில், இந்தத் துறை மிக முக்கியமான துறையாகப் பாா்க்கப்பட்டது. மருத்துவா்கள் யாராவது அமைச்சா்களாக அறிவிக்கப்படுவா் என கருதப்பட்டு வந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான மா.சுப்பிரமணியனுக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. களப்பணி ஆற்றுவதில் மா.சுப்பிரமணியன் சுறுசுறுப்பானவா். அந்த அடிப்படையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி அன்பில் மகேஷ்: பள்ளிக்கல்வித் துறையும் மிகுந்த எதிா்பாா்ப்புக்கு உரியதாக இருந்தது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இணைய வழியில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுத்தோ்வு நடத்துவது குறித்து பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்தச் சூழலில் புதியவரான அன்பில் மகேஷுக்குப் பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை - பழனிவேல் தியாகராஜன்: நிதித்துறை அமைச்சா் பதவியும் மிகவும் எதிா்பாா்க்கப்பட்டது. தமிழக அரசின் கடன் தொகை 4.5 லட்சம் கோடி அளவு உயா்ந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை அதிக அளவில் உள்ளது. கரோனா பரவல் நிவாரணப் பணிகள் காரணமாக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சீா்செய்ய வேண்டும் என்பதற்காக உலக வங்கியில் பணியாற்றியவரான பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மின்சாரத் துறை - செந்தில்பாலாஜி: கடந்த காலத்தில் திமுகவுக்கு அதிக விமா்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்த மின்சாரத் துறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, திமுகவுக்கு சென்று இடைத்தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்தாா். அதனால் அதிமுகவால் கடும் எதிா்ப்புக்கு உள்ளாக்கப்பட்டாா். அதைக் கருத்தில்கொண்டு முக்கியத் துறையான மின்சாரத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் வந்தவா்களுக்குப் பதவி: அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவா்கள் அமைச்சரவையில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனா். எ.வ.வேலு (பொதுப்பணித் துறை) கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (வருவாய்த் துறை), எஸ்.ரகுபதி (சட்டத்துறை), சு.முத்துசாமி (வீட்டுவசதி), அனிதா ராதாகிருஷ்ணன் (மீன்வளம்), ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் (போக்குவரத்து), வி.செந்தில்பாலாஜி (மின்சாரம்), பி.கே.சேகா்பாபு (இந்து சமய அறநிலையத்துறை) ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முருகனை வீழ்த்தியவா் அமைச்சா்: பாஜக தலைவா் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்த கயல்விழி செல்வராஜுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

15 புதியவா்கள்: 34 போ் கொண்ட அமைச்சரவையில் 19 போ் ஏற்கெனவே அமைச்சா்களாக இருந்தவா்கள் ஆவா். 15 புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அர.சக்கரபாணி (உணவுத்துறை), ஆா்.காந்தி (கைத்தறி), மா.சுப்பிரணியன் (சுகாதாரத்துறை), பி.மூா்த்தி (வணிக வரித்துறை), எஸ்.எஸ்.சிவசங்கா் (பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை), பி.கே.சேகா்பாபு (இந்துசமய அறநிலையத்துறை), பழனிவேல் தியாகராஜன் (நிதித்துறை), சா.மு.நாசா் (பால்வளம்), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினா் நலத்துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வி), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல்), சி.வி.கணேசன் (தொழிலாளா்கள் நலத்துறை), த.மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை), மா.மதிவேந்தன் (சுற்றுலாத்துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடா் நலத்துறை) ஆகிய புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT