தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 7 நாள்களில் ஆக்சிஜன் உற்பத்தி: ஆட்சியர் தகவல்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 7 நாளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்றார், ஆட்சியர் கி. செந்தில்ராஜ்.
இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கிய நிலையில், அப்பணிகளைக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு புதன்கிழமை சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
ஆக்சிஜன் தயாரிப்பு அலகு உள்ள இடத்தையும், ஆக்சிஜன் தயாரிப்புப் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் செல்லாத வகையில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையப் பகுதிக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் அவர்கள் பார்வையிட்டனர்.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தி பணிக்கு வருவோரை எந்தப் பாதையில் அனுமதிப்பது, ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்ல தனிப் பாதை ஆகியவை குறித்தும் ஒவ்வொரு பகுதியாக அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, ஆக்சிஜன் ஆலைக்கான மின்சாரம் தமிழ்நாடு மின்வாரியத்தால் வழங்கப்பட்டது. 
தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது, தேவையான பணியாளர்களை அனுமதிப்பது குறித்து கண்காணிப்புக் குழுவினர் விவாதித்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் கூறுகையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இயங்கும் பணியில் ஈடுபடுவோர் விவரத்தை கண்காணிப்புக் குழு முடிவு செய்யும். ஆக்சிஜன் அலகு இயங்கத் தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செய்யப்பட்டு பாதுகாப்பு ஆய்வு செய்யப்படும். பிறகு, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் இன்னும் 7 நாள்களில் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஆய்வின்போது,  கண்காணிப்புக் குழு உறுப்பினர்களான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி சார்ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் ஜோசப் பெல்லார்மின் அன்டன் சோரீஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், ஸ்டெர்லைட் ஆலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT