தமிழ்நாடு

ஆக்சிஜன் - தடுப்பூசி பற்றாக்குறை: பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்

6th May 2021 09:00 PM

ADVERTISEMENT

ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி உற்பத்திக்கும் பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்தி பயன்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர். தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்று அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் பிரச்னைகள் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இத்தகை சூழ்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியையும், விநியோகத்தையும் அதிகரிக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சியில் இயங்கும் பெல் நிறுவனத்திலும், நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்திலும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதின் மூலம் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையெல்லாம் மத்திய அரசின் ஒப்புதலும், ஒரு சில கோடி ரூபாய்களுக்கான இயந்திரங்கள் மட்டுமே. நாடே ஆக்சிஜன் தேவைக்கு கையேந்தி நிற்கும் நிலையில் மத்திய அரசு மேற்கண்ட நிறுவனங்களிலும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்திட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போல தடுப்பூசி பற்றாக்குறையும் பெரும் பிரச்னையாக உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தாலும் அதற்கு போதுமான அளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்படவில்லை. மேலும், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மேலும் பல மாதங்கள் ஆகும் என செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அனைத்து கட்டமைப்பு வசதிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உள்ளார்கள். பல முறை வற்புறுத்திய பின்னரும் மத்திய அரசு இந்த நிறுவனத்திற்கு தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலை வழங்க மறுத்து வருகிறது. மனித உயிர்கள் மடிந்தாலும், பொதுத்துறைகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் கவனம் செலுத்த மாட்டோம் என்கிற கோட்பாட்டினை மத்திய மோடி அரசு கடைபிடித்து வருவதாகவே தோன்றி வருகிறது. இத்தகையப் போக்கு இந்திய நாட்டு மக்களின் உயிரோடு விளையாடுவதாக உள்ளது.

எனவே, ஆக்சிஜன் உற்பத்திக்கும், தடுப்பூசி உற்பத்திக்கும் பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக ஈடுபடுத்தி பயன்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT