தமிழ்நாடு

'மோடி அரசின் தவறான செயல்பாடுகளுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள்'

26th Mar 2021 02:07 PM

ADVERTISEMENT

மோடி அரசின் தவறான செயல்பாடுகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் உரிய பதில் அளிப்பார்கள் என  முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.

முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளருமான பல்லம் ராஜூ சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்துக்கு மாநிலம் நுழைவுத் தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்து அகில இந்திய அளவில் மாணவர்களின் கல்வி நலனை மனதில் கொண்டு நீட் தேர்வினை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட் தேர்வை நாங்கள் கொண்டுவந்தோம். ஆனால் அதனை செயல்படுத்தும் முறையில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை. வருங்காலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் போது நீட் தேர்வு முறை எளிமைப்படுத்தப்படுவதுடன் மாணவர்கள் அவர்களது உள்ளூர் மொழியில் தேர்வு எழுதவும் நாங்கள் பரிந்துரை செய்வோம். நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய நாங்கள் பரிந்துரை செய்வோம்.

தமிழக மக்கள் எப்போதும் சரியான அரசை தேர்ந்தெடுப்பார்கள். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சாதாரண மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழிற்சாலைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதிலிருந்து இதுவரை சிறு தொழில்கள் மீளவே இல்லை. எதற்காக பணமதிப்பிழப்பு நடைபெற்றதோ, அது நடக்கவே இல்லை கருப்பு பணத்தை மீட்பதற்காக நடத்தப்பட்டதாக கூறப்படும் பணமதிப்பிழப்பு ஏழை மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வரிவிதிப்பை ஏற்படுத்துவதற்காக சரக்கு சேவை வரி எனும் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. ஆனால் தெளிவான வரையறை இல்லாமல் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் அவசர கோலத்தில் சரக்கு சேவை வரியை பாஜக அரசு அறிமுகப்படுத்தியதில் சிறு சிறு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை மிகவும் பாதிப்படையச் செய்து விட்டது. பாஜக அரசின் நடவடிக்கைகளால் தொழில்துறை முற்றிலும் நலிவடைந்த நிலையில்,  இதுபோன்ற நிலை கரோனாவால் ஏற்பட்டதாக பழி போட்டு விட்டார்கள். மத்திய பாஜக அரசு ஆளும் தகுதியை இழந்துவிட்டது. எந்த ஒரு வாய்ப்பும் தொழிலாளர்களுக்கு வழங்காமல், முன் திட்டமின்றி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால் ஏழை, எளிய மக்கள் நிறைய பேர் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் நடந்தே சென்று பாதிக்கப்பட்டனர். கரோனா தொற்றைவிட, பாஜக அரசாங்கம் அதனை தவறாக கையாண்டதால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன.

புதிய கல்விக் கொள்கையை விவாதித்து நிறைவேற்றாமல் அவசரகதியில் நிறைவேற்றியுள்ளனர். இந்தி திணிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கல்விக்கொள்கையிலும் ஹிந்தி திணிப்பு அதிக அளவில் உள்ளது. இதேபோன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனை பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருப்பதால் எந்தவித விவாதமும் இன்றி அவசர அவசரமாக சட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

முடிவெடுக்கும் திறன் இல்லாத மத்திய ஆட்சியாளர்களால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தவில்லை அரசின் தோல்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் அனைத்துத் துறையயையும் சீர் செய்வார் என எதிர்பார்க்கிறோம்.

மோடி அரசின் தவறான செயல்பாடுகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் உரிய பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்களை இனியும் ஏமாற்ற முடியாது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். காங்கிரசின் பத்தாண்டுகால ஆட்சியில் உணவு உறுதியளிப்பு, கட்டாய கல்வி சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளரிடம் கூறினார்.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக சொல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு கட்டாயம் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம். ஆனால் பொதுமக்கள் அவரை தேசிய அளவிலான தலைவராக எப்போதோ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். குறிப்பாக தென்னிந்திய மக்கள் அவர் மீது மிகவும் அன்பு மிக்கவர்களாக உள்ளனர் என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT