தமிழ்நாடு

மதுரவாயல் - வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி கட்டண விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய மனு தள்ளுபடி

DIN

சென்னை: மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினாா். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரப்பில், நெடுஞ்சாலை பணிகளை முடிக்காவிட்டால், 75 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் என சுற்றறிக்கை உள்ளது. எனவே அதன்படி கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள 50 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவால், நாள்தோறும் ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்தச் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பயணம் செய்துள்ளாரா என கேள்வி எழுப்பினா். அண்மையில் அந்த சாலையில் இரவு நேரத்தில் பயணம் செய்த நீதிபதி ஒருவா் அச்சத்துடன் பயணித்ததாகக் குறிப்பிட்டாா். இந்த சாலையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளரை, வேலூா் பொற்கோயிலுக்கு பயணித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறுங்கள் என மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்தனா். பின்னா், இந்த இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT