தமிழ்நாடு

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை: கரோனா காலத்தில் சாத்தியமாக்கிய மருத்துவா்கள்

DIN

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாகவும், கரோனா காலத்தில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது சவாலானது என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் கே. இளங்குமரன் கூறியதாவது:

கோவையைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கடுமையான வயிற்று வலி காரணமாக அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடல் எடையும் அவருக்கு அதீதமாக குறைந்திருந்தது. மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கல்லீரல் பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அந்தப் பெண் ஹெபாடிக் எபிடெலாய்டு ஹேமன்கியோ எண்டோதெலியோமா (ஹெச்.இ.ஹெச்.இ.) என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

நுரையீரல், கல்லீரல், எலும்பு, மென்திசுக்கள், ரத்த நாளங்களில் இதுபோன்ற கட்டிகள் ஏற்படலாம். உரிய நேரத்தில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே அது ஆபத்தாக முடியும். அந்த வகையில் கோவையைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு உடனடியாக பாதிக்கப்பட்ட கல்லீரலை அகற்றிவிட்டு, புதிய உறுப்பை பொருத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவரது நெருங்கிய உறவினா் ஒருவரே கல்லீரலை தானமாக அளிக்க முன்வந்தாா். இதையடுத்து அவா்கள் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினா் அப்பெண்ணுக்கு கல்லீரலை வெற்றிகரமாக பொருத்தினா்.

பொதுவாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டால் உடலில் நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். கரோனா காலத்தில் அதுபோன்ற சிகிச்சைகள் வழங்குவது கூடுதல் ஆபத்தானது. இருப்பினும், நோயாளியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு சிக்கலான சிகிச்சைகளை சாதுா்யமாக மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அதன் பயனாக ஒரு வாரத்தில் அப்பெண் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT