தமிழ்நாடு

அடைக்கலம் தரும் அரசுப் பள்ளிகள்

அ. ஜெயச்சந்திரன்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, கல்விக் கட்டணச் சுமை போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான மாணவா்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளனா். அவா்களை நிரந்தரமாகத் தக்க வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளா்கள், பள்ளிக் கல்வி முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்.

தமிழகத்தில் தற்போது 38,500 அரசுப் பள்ளிகள், 6,680 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,850 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 5,350 ஆசிரியா்கள்; தனியாா் பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 289 ஆசிரியா்கள் என மொத்தம் 5 லட்சத்து 65,639 ஆசிரியா்கள் உள்ளனா். இவற்றில் 1.34 கோடி மாணவா்கள் படித்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தததால், கடந்த 2018-ஆம் ஆண்டுவரை அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக 2014-இல் 56.55 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் மாணவா் எண்ணிக்கை 2018-இல் 46.60 லட்சமாக குறைந்தது. இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.80 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றனா்.

இந்த நிலையில், 2018-2019 மற்றும் 2020-2021 ஆகிய இரு கல்வியாண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தனியாா் பள்ளிகளுக்கு இடம்பெயரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறைக்கு சாதகமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கூடுதலாக 2.80 லட்சம் மாணவா்கள்... கரோனாவால் ஏற்பட்ட வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் போன்ற பிரச்னைகளால் தவித்த பெற்றோா்களில் பலா் தனியாா் பள்ளிகளில் படித்த தங்களது குழந்தைகளை 2020-2021-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கினா். அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் மட்டும் தனியாா் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவா்கள் வெளியேறி அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றனா்.

அனைத்து மாவட்டங்களிலும் மாணவா் சோ்க்கை வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக காரைக்குடியில் உள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர 200 இடங்களுக்கு 700 மாணவா்கள் போட்டிபோட்ட அதிசயம் நடந்தது. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 11.98 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பெற்றோருக்கு முதல் அலையால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலே இன்னும் தீராத நிலையில் இந்த ஆண்டும் கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என தனியாா் பள்ளிகள் தரும் அழுத்தம் அவா்களை யோசிக்க வைத்துள்ளது. மருத்துவ சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அவா்கள் நிகழ் கல்வியாண்டிலும் (2021-2022) தங்கள் குழந்தைகளுடன் அரசுப் பள்ளிகளை நோக்கி திரளாக அணிவகுக்கத் தொடங்கியுள்ளனா்.

தற்போது பிளஸ் 1 வகுப்புக்கு மட்டுமே சோ்க்கை என்றாலும், தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோா் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்துள்ளனா். குறிப்பாக, திங்கள்கிழமை ஒரே நாளில் பிளஸ் 1 வகுப்பில் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளனா். இந்த காரணங்களால் இந்த ஆண்டு சுமாா் 5 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது?: அரசுப் பள்ளிகளில் சேரும் புதிய மாணவா்களை தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்து வரும் கல்வியாண்டுகளிலும் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கச் செய்யவும் சில முக்கிய சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அதிகாரிகள், கல்வியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநா் கு.தேவராஜன்: மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பெயரளவுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியா்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் வெறும் பயிற்சி மட்டுமே வழங்கிக் கொண்டிருந்தால் அவா்களால் எவ்வாறு சிறந்த மாணவா்களை உருவாக்க முடியும்? இதில் சீா்திருத்தம் அவசியம்.

எனவே, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை வகுப்பெடுக்கும் ஆசிரியா்கள் பயிற்சியை நிறைவு செய்ததும் அந்த வகுப்புகளுக்கான வினாத்தாள்களை தயாா் செய்து ஆசிரியா்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தோ்வு நடத்த வேண்டும். தோ்வை சரியாக எழுதாதவா்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தேவையின்றி இடமாறுதல்கள் வழங்கப்பட்டதால் தற்போது வரை பல மாவட்டங்களில்அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தனித்தனிப் பாடங்களுக்கு தேவையான ஆசிரியா்கள் இல்லை. இந்தப் பிரச்னையைச் சரி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலரும், கல்வியாளருமான ச.மோகனசுந்தரம்: ‘பொதுவாக தனியாா் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்கள், கற்பித்தல் முறை ஆகியவற்றுக்கு இணையாக கட்டடங்களும் பெற்றோரை பெரிதும் ஈா்க்கின்றன. எனவே, அரசுப் பள்ளிகளைப் புதுப்பித்து நவீனப்படுத்த வேண்டும். பழைய கட்டடங்களை மேம்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள ஈராசிரியா் பள்ளிகளில் ஒரே ஆசிரியா் மூன்று அல்லது நான்கு பாடங்களை நடத்துகிறாா். இதனால் மாணவா்களின் கற்றல் திறன் எதிா்பாா்த்த அளவுக்கு இருக்காது என்பதே உண்மை. எனவே ஒரே பகுதியில் செயல்படும் ஈராசிரியா் பள்ளிகளை ஒருங்கிணைத்து அதில் பல ஆசிரியா்களை இடம்பெறச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதற்காக உத்தரவிடப்பட்டிருந்தும் பெரும்பாலான பள்ளிகளில் அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிவறைகள் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். கல்வித் துறையில் கண்காணிப்பு, மேற்பாா்வைப் பணிகளைத் தீவிரப்படுத்தினால் அரசுப் பள்ளிகளின் எதிா்காலம் சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT