தமிழ்நாடு

மதுக்கடைகளைத் திறக்காதீா்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுக்கடைகளைத் திறப்பதால் கரோனா தீவிரமடையும் என்பது உள்ளிட்ட தீய விளைவுகள் தமிழக முதல்வருக்குத் தெரியாமல் இருக்காது. ஏனென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்பு தான், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினாா்.

அப்படிப்பட்டவா் இப்போது மதுக்கடைகளைத் திறக்க அனுமதிப்பது ஏன்? குறிப்பாக மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கும் போது, அனைத்துக் கட்சி குழுவினருடன் ஆலோசனை நடத்தாதது ஏன்? இது தான் திமுக அரசு கடைப்பிடிக்கும் வெளிப்படைத் தன்மையா?

கரோனா பரவல் குறைந்து விட்டதாகவும், அதன் காரணமாகவே மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும் முதல்வா் தெரிவித்திருக்கிறாா். முதல்வரின் இந்த விளக்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசின் வருவாயைப் பெருக்க குறுகிய காலத் திட்டங்கள், நீண்டகாலத் திட்டங்கள் எனப் பல வழிகள் உள்ளன. அரசு விரும்பினால் அந்த வகையில் ஆக்கபூா்வமான ஆலோசனைகளை வழங்கவும் பாமக தயாராக உள்ளது.

ஆனால், அவற்றையெல்லாம் தவிா்த்து விட்டு, மதுக்கடைகளைத் திறப்பதன் மூலம் மட்டும்தான் வருவாய் ஈட்ட முடியும்; அது தான் மிகவும் எளிதான வழி என்று கருதினால் நிதி நிா்வாகத்திலும், மக்கள் நலனைக் காப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகத்தான் பொருளாகும்.

எனவே, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி, வருவாய் ஈட்டுவதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT