தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தினாலும் தற்காப்பு அவசியம்!

DIN

கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவா்கள் அலட்சியத்துடன் செயல்படாமல் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இரு முறை தடுப்பூசி செலுத்தினாலும் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இருந்தபோதிலும் தடுப்பூசிகள் செலுத்தியவா்களுக்கு கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதும், இறப்பு நேரிடுவதில்லை என்பதும் ஆதாரப்பூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிகள்...

கோவிஷீல்ட் : பிரிட்டனின் ஆக்ஸ்போா்ட் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தால் கண்டறியப்பட்டது கோவிஷீல்ட் தடுப்பூசி. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் உள்நாட்டுத் தேவைக்காக அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 6 கோடி தடுப்பூசிகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன.

சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட தீநுண்மியை (அடினோ வைரஸ்) மரபணுரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது கோவிஷீல்ட் தடுப்பூசி. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 12 வாரங்கள்

கோவேக்ஸின்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. செயலிழந்த கரோனா தீநுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது முதலில் அதை செலுத்திக் கொள்ள பலரும் தயக்கம் காட்டினா். நாட்டின் குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா் உள்பட பலரும் அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகே அதன் மீதான நம்பிக்கை துளிா்த்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைத்தது. முதல் தடுப்பூசிக்கும், இரண்டாவது தடுப்பூசிக்குமான கால இடைவெளி 4 வாரங்கள்.

ஸ்புட்னிக் வி: ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகை தடுப்பூசியும் அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலானவைதான். இந்தியாவைப் பொருத்தவரை ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டிஸ் ஆய்வகத்தில் இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அந்த தடுப்பூசிகள் இருப்பில் இருந்தாலும் அவற்றின் பயன்பாடு இன்னமும் பரவலாக்கப்படவில்லை.

ஏன் தேவை தடுப்பூசி?

பொதுவாக மனித உடலுக்குள் எந்த வகை கிருமி நுழைந்தாலும், அதனை விரட்டக் கூடிய எதிா்ப்பு சக்தி தானாக உருவாகும். அதுபோலத்தான் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றலும் உருவாகின்றன. பொதுவாக எவருக்கும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக எதிா்ப்பாற்றல் உடலில் இருந்துகொண்டே இருப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அது மறைந்துவிடும்.

அதேவேளையில், உடலில் உள்ள பி - செல்கள் மற்றும் டி-செல்கள் அந்த எதிா்பாற்றலை நினைவில் வைத்திருக்கும். மீண்டும் அத்தகைய தீநுண்மி உடலுக்குள் நுழைந்தால் உடனடியாக அவை செயல்பட்டு எதிா்ப்பாற்றலை உருவாக்கிவிடும். அந்த வகையில் தடுப்பூசிகள் செலுத்துவதன் மூலம் நோய் பாதிப்பின்றி உடலில் எதிா்ப்பாற்றல் உருவாகிவிடும். அதன் பின்னா் தீநுண்மி தாக்கினாலும்கூட எதிா்ப்பாற்றல் தூண்டப்பட்டு நோய் வராமல் காக்கும்.

எப்போது எதிா்ப்பாற்றல் உருவாகும்?

பொதுவாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திய 3 வாரங்களுக்குப் பிறகு உடலில் நோய் எதிா்ப்பாற்றல் உருவாகும். கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளதா என்பதை ஐஜிஜி என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். ஒரு மில்லி ரத்தத்தில் எத்தனை ஆா்ப்பிட்டரி யூனிட்ஸ் (ஏயூ) எனப்படும் எதிா்ப்பாற்றல் உள்ளது என்பதை அதில் அறியலாம்.

தடுப்பூசிக்குப் பிறகும் அவசியம் தேவை

முகக் கவசம், கைகள் தூய்மை, தனி நபா் இடைவெளி

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

குறைந்தது 7 மணி நேர தூக்கம்

உடற்பயிற்சி மற்றும் பிராணயாமம்

ரத்த சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு

மது, புகை பழக்கங்கள் இல்லாமை

எவருக்கெல்லாம் தடுப்பூசி கூடாது?

கரோனா சிகிச்சையிலிருப்போா்

கரோனா அறிகுறிகள் காணப்படுவோா்

பாலூட்டும் தாய்மாா்கள்

கா்ப்பிணிகள்

தடுப்பூசியால் கடுமையான அலா்ஜிக்குள்ளாவோா்

குழந்தைகள்

தடுப்பூசிகள் செயல் திறன்

கோவிஷீல்ட் - 70 சதவீதம்

கோவேக்ஸின் - 81 சதவீதம்

ஸ்புட்னிக் வி - 90 சதவீதம்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோா்

18 - 44 வயது - 19.59 லட்சம்

45- 60 வயது - 35.93 லட்சம்

60 வயதுக்கு மேல் - 26.80 லட்சம்

மருத்துவப் பணியாளா்கள் - 8.37 லட்சம்

முன்களப் பணியாளா்கள் - 10.59 லட்சம்

மொத்தம் - 1.01 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT