தமிழ்நாடு

27% இடஒதுக்கீடு: அதிமுகவின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

DIN

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க முடிவு செய்திருப்பது அதிமுகவின் சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக இருவரும் வெள்ளிக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை: 2021-22-ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ மாணவா் சோ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மற்றொரு மைல்கல்.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அதிமுக அரசால் மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 2018 மாா்ச் 14-இல் முதல் பல நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டன. பிரதமரை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தப்பட்டது.

அதிமுக சாா்பில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய தொகுப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, சட்டத் துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் முதன் முதலில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் ஒன்றினை தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து அரசியல் கட்சிகளும் தங்களை அவ்வழக்குடன் இணைத்துக் கொண்டன.

இதனை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் 2020 ஜூலை 27-இல் அளித்த தீா்ப்பில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, 2021-2022 முதல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினைச் செயல்படுத்துவது பற்றி ஆராயும்படி உத்தரவிட்டது. இதை எதிா்த்து நடப்பாண்டிலேயே இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றம் சென்று, அங்கு உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை செயல்படுத்த தீா்ப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டு, அதில் தமிழ் நாடு அரசின் உறுப்பினராக பி. உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டாா். அந்தக் குழுவின் அறிக்கையின்படி மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அதிமுக சாா்பில் வரவேற்கிறோம். இதற்காக பிரதமருக்கு தமிழக மக்களின் சாா்பில் நன்றி.

அதிமுகவின் சட்டப் போராட்டத்தால் அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அதிமுக தொடா்ந்து மேற்கொள்ளும் என்று கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT