தமிழ்நாடு

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மைதான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

23rd Jul 2021 09:41 PM

ADVERTISEMENT

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மைதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களின் (சி.எஸ்.ஆர்.) நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்றது. 
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால் நான் சொன்னது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்பதுதான். 19-4-2021 அன்று வேலூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் இறந்திருக்கிறார்கள். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர் இறந்திருக்கிறார்கள். இங்கு சிகிச்சை பெற்றவர்கள் 1200 பேர். 20 கே.எல். ஆக்ஸிஜன் இருந்திருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனையில் மொத்தம் 460 நோயாளிகள் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். 
அதில் ஆக்ஸிஜன் வசதியுடன் 310 நோயாளிகள் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். ஆக்ஸிஜன் அளவு என்பது 10 கே.எல்., அளவு இருந்திருக்கிறது. குழந்தைகள் 13 பேர் இருந்திருக்கிறார்கள். இந்த இறப்புகள் என்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்ல. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற மூன்று சம்பவங்களுமே தொழில்நுட்ப கோளாறு, ஆக்ஸிஜன் குழாய் அடைப்பு, குழாய் பழுது போன்ற காரணங்களால்தான் ஏற்பட்டிருக்கிறது. ஆக்ஸிஜன் இல்லாமல் இல்லை.
பேரிடர் நேரம் என்பதால் பள்ளிகளில் நேரடியாக நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை. இணையதளம் வாயிலாகவும், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெங்கு, ஜிகா போன்ற வைரஸ்களால் எந்தவித புதிய பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 22 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், வீடுகள்தோறும் சென்று தேவையில்லாமல் தேங்கியிருக்கிற நீர், தென்னை ஓடு, உடைந்த பானை, டயர் போன்றவற்றை அகற்றுவது, துண்டறிக்கைகள் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
கடந்த வாரம் நானும், சுகாதாரத் துறை செயலாளர் அவர்களும் வாழையாறு என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் போய் வீடு, வீடாக துண்டறிக்கைகள் கொடுத்து டெங்குவை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம் என்றார்.

Tags : Minister Ma Subramanian
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT