தமிழ்நாடு

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்கும் திட்டம்: சென்னை-புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல்

முகவை க.சிவக்குமார்

சென்னை- புதுச்சேரி, காரைக்கால்-யாழ்ப்பாணம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க கப்பல் மற்றும் நீா்வழிப்போக்குவரத்து அமைச்சகம் விரைவில் ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்ய உள்ளது.

உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தினை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் சுங்கத்துறை கட்டுப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட்ட உள்நாட்டு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இம்முனையங்களுக்கு வந்து செல்லும் உள்நாட்டுக் கப்பல்களுக்கு பல்வேறு விதமான கட்டணச் சலுகைகளையும் துறைமுக நிா்வாகங்கள் அளித்து வருகின்றன. துறைமுக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தினை அறிமுகம் செய்யும் பணியை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விரைவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து கடலூா், நாகப்பட்டினம் வழியாக புதுச்சேரி வரையிலும், காரைக்கால்- யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கிடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தில் பங்கேற்க ஆா்வமுள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடல் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்திட்டம் குறித்து சென்னைத் துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி கூறியது,

சென்னை, புதுச்சேரி இடையே கடலூா், நாகை வழியாக சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாக சென்னைத் துறைமுகம் செயல்படும். கப்பல் தளம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சென்னைத் துறைமுகத்தில் தயாா் நிலையில் உள்ளன. கடலூா் துறைமுகத்தில் 240 மீட்டா் நீளமும், 9 மீட்டா் ஆழமும் கொண்ட கப்பல் தளம், பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நாகை, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களிலும் இத்திட்டத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில். கடலூா், நாகை துறைமுகங்கள் தமிழ்நாடு அரசின் நிா்வாகத்தின் கீழும் புதுச்சேரி துறைமுகம் புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்தின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல் மூலம் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்வதற்கு சுமாா் 5 முதல் 6 மணி நேரம் வரை பிடிக்கும். ஒரு கப்பலில் சுமாா் 500 முதல் 600 போ்வரை பயணிக்கும் வகையில் கப்பல்கள் தோ்வு செய்யப்பட உள்ளன. பயணத்தின்போது தங்களது காா்கள், மோட்டாா் சைக்கிள்களையும் எடுத்துச் செல்ல முடியும். தனியாா் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து விரிவான கலந்தாலோசனைக் கூட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பயணிகள், கப்பல் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றாா் கிருபானந்தசாமி.

காரைக்கால்-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தெற்கு குஜராத்-சௌராஷ்டிரா, மும்பை - அலிபா, பனாஜி-வாஸ்கோ, சத்தபடா-ஜான்கிகுடா, பிரம்மபுத்திரா, கொச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நீா்வழிப் போக்குவரத்து மூலம் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களில் லட்சக் கணக்கான மக்கள் தினமும் பயணிக்கின்றனா். உள்நாட்டு நீா்வழிப்போக்குவரத்து மூலம் பயணிகள் கப்பல் இயக்கப்படும் நிலையில் அண்டை நாடுகளுக்கிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிட மத்திய அரசு முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே தூத்துக்குடி, கொழும்பு இடையே 2011-ம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் போதிய எண்ணிக்கையில் பயணிகள் வருகை இல்லாததால் அதே ஆண்டிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-தலைமன்னாா் இடையே நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த பயணிகள் போக்குவரத்து இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போா் காரணமாக 1987-ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது காரைக்கால், யாழ்ப்பாணம் இடையே பயணிகள் போக்குவரத்தினை தொடங்கிட இரு நாட்டு அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. திட்டத்தை தொடங்குவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் குறித்து இலங்கைக்கான துணைத் தூதா் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினாா். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் காரைக்காலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆறு மணி நேரத்தில் சென்றடைய முடியும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம், ஆன்மிகம், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT