தமிழ்நாடு

போடி அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டு தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

26th Jan 2021 02:25 PM

ADVERTISEMENT


போடி: போடி அருகே கி.பி.10-ஆம் நூற்றாண்டு தவ்வை சிற்பம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்று துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வர் சு.சிவக்குமார் வழிகாட்டுதலின்பேரில் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சி.மாணிக்கராஜ், மாணவர்கள் க.ராம்குமார், க.அஜித்குமார் மற்றும் நெல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் சின்னமனூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது கி.பி.10, 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை என்ற மூத்த தேவியின் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து உதவிப் பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறியது: பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் அழகுநாட்டு பிரிவில் முக்கிய ஊராக சின்னமனூர் இருந்துள்ளது. பாண்டியர்களின் செப்பேட்டுக்கும், கோயில் கலைக்கும் வரலாற்றில் புகழ் பெற்று விளங்கும் சின்னமனூர் பண்டைய காலத்தில் அரபதசேகர மங்கலம், அரவார் மங்கலம், நற்செய்கைப்புத்தூர், மந்திர கௌர மங்கலம், அரிகேசரி நல்லூர், திருப்பூலந்துறை போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.  

ADVERTISEMENT

இத்தகைய பழமையான வரலாற்றைப் பெற்ற இந்த ஊரின் முக்கிய சாலையில் தவ்வை என்ற பெயரில் அழைக்கப்படும் மூத்த தேவி சிற்பம் ஒன்று காணப்பட்டது.

இந்த சிற்பத்தை ஆய்வு செய்ததில் 6 அடி நீளம், 4 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதில் தவ்வை தனது பிள்ளைகளான மாந்தன் என்ற கோமுகன், மாந்தி ஆகியோருடன் பீடம் ஒன்றில் சுகாசனம் அமர்வில் அமர்ந்த நிலையில் புடைப்பு சிற்பகமாக வெட்டப்பட்டுள்ளது. தவ்வையின் தலையும், வலது கையும் உடைந்து சேதமடைந்த நிலையிலும், இடது கையை இடது தொடையில் ஊன்றிய நிலையிலும் காணப்படுகிறது.

தவ்வையின் வலது பக்கம் மாந்தன் விவசாயிகள் உழவு தொழிலுக்கு பயன்படுத்தும் காளையின் முக அமைப்புடன் வலது கையில் தடியுடன் இடது கையை இடது தொடையில் வைத்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தவ்வையின் இடது பக்கமாக மாந்தி தனது வலது கையை வயிற்றுக்கு முன்பக்கமாக மடக்கி கடக முத்திரையில் ஒரு பொருளை பிடித்தப்படியும், இடது கையை இடது தொடையில் அமர்த்தியபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாந்தன், மாந்தியின் முகங்கள் தேய்ந்த நிலையில் உள்ளது. 

இச்சிற்ப அமைப்பின்படி காலத்தால் கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் தேனி மாவட்டத்திலேயே பழமையானதும், முதல் தவ்வை சிற்பம் இது ஒன்றுதான் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது என்றார் சி.மாணிக்கராஜ்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT