தமிழ்நாடு

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்து நீக்கம்

DIN

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 

புதுவை காங்கிரஸிலிருந்து பிரிந்து என்.ஆா்.காங்கிரஸை உருவாக்கிய என்.ரங்கசாமி கடந்த 2011-இல் ஆட்சியை கைப்பற்றினாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான ஆ.நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. ஆனால், தோ்தலுக்குப் பின்னா் ஆளுநா் கிரண் பேடியை சமாளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூத்த அரசியல்வாதியான வே.நாராயணசாமிக்கு முதல்வா் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.

அப்போது, கடும் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் 2-ஆவது இடம் வழங்கியது. மேலும், புதுவை காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தாா். பொதுப் பணி, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. ஆனால், ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வா் நாராயணசாமி கையே ஓங்கியது. மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. 

இது, முதல்வா் நாராயணசாமி, அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோரிடையே பனிப்போராக வெடித்தது. கடந்த 6 மாதங்களாகவே அமைச்சா் நமச்சிவாயம் ஓரங்கப்பட்ட நிலையில் இருந்தாா். இதனால், அவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவாா் என்று தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில், அமைச்சா் நமச்சிவாயம் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை இரவு வில்லியனூரிலும், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியிலும் ஆலோசனையில் ஈடுபட்டாா். 

இதுகுறித்து அவரது ஆதரவாளா்கள் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறவும், அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா் பதவிகளை ராஜிநாமா செய்யவும் நமச்சிவாயம் முடிவு செய்துள்ளாா். இதன்படி, திங்கள்கிழமை (ஜன.25) பிற்பகல் 12 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் அமைச்சா் நமச்சிவாயம், முதல்வா் நாராயணசாமியை சந்தித்து தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வாா்.

இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து பேரவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அளிப்பாா். மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்ப உள்ளாா். தொடா்ந்து, வருகிற 27-ஆம் தேதி தில்லி செல்லும் அமைச்சா் நமச்சிவாயம், பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளாா் என்றனா். 

இது குறித்து புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறுகையில், புதுச்சேரி கட்சித் தலைவராக இருந்த போது முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராக சுதந்திரமாக செயல்பட்டார். ஆனால் கட்சிக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டார். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். அவருடன் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அமைச்சர் நமச்சிவாயம் கட்சிக்கு விரோதமாக பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பல நிர்வாகிகளை ராஜிநாமா செய்து விட்டு வருமாறு அழைக்கிறார். கட்சிக்கு எதிராக துரோகம் செய்து வேறு கட்சிக்கு செல்ல தயாரராகி வருகிறார் என்றார் சுப்ரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT