தமிழ்நாடு

பேரறிவாளன் உள்பட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: இரா.முத்தரசன்

22nd Jan 2021 10:06 PM

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்பட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களின் நீண்ட கால சிறைவாசத்தைக் கருத்தில் கொண்டும், அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி “அரசியலமைப்பு சாசனம் பரிவு 161ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம்” எனத் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு,  சட்டமன்றப் பேரவையில் 2018 செப்டம்பர் 9ஆம் தேதி “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்காமல், பொருத்தமற்ற காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் உச்சமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புலானாய்வுத் துறையின் பன்நோக்கு மற்றும் கண்காணிப்புக் குழுவின் விசாரணைக்கும், ஆளுநர் முடிவெடுப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் ஏழு பேர் விடுதலை குறித்த முடிவெடுப்பதில், மேலும் இழுத்தடிக்காமல்  பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Tags : R Mutharasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT