தமிழ்நாடு

தமிழகத்தில் மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

22nd Jan 2021 02:59 PM

ADVERTISEMENT


ஈரோடு: தமிழகத்தில் மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ராகுல் காந்தி வரும் ஞாயிற்றுக்கிழமை  அன்று  சுற்றுப்பயணமாக ஈரோடு வருகிறார். 

அன்று காலை 10 மணிக்கு ஊத்துக்குளியிலும் 10.30 மணிக்கு பெருந்துறையிலும் மக்களை சந்திக்கிறார். 11 மணிக்கு ஈரோட்டில் உள்ள  காமராஜர், சம்பத்  சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.  அவருக்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து 12 மணிக்கு  பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. சைவ உணவு சாப்பிடுவோருக்கு கரோனா பரவும் அபாயம் குறைவு?

அதன் பின் 12.30 மணி அளவில் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செய்கிறார். பின் நெசவாளர்களை சந்திக்கிறார். அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். 3 மணி அளவில் காங்கேயம் பகுதியில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்பு அன்றிரவு அங்கேயே தங்குகிறார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து  என்ன முடிவு? என்ற கேள்விக்கு,  என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தங்களை முன்னிலைப்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அதுபோன்றுதான் புதுச்சேரியிலும் தி.மு.க. தங்களை முன்னிலைப்படுத்தி உள்ளது. எங்களை பொறுத்தவரை நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். 234 தொகுதியிலும் போட்டியிட எங்களுக்கு ஆசைதான். இருந்தாலும் அது சாத்தியமில்லை. ஒவ்வொரு கட்சியினரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஆட்சியை பிடிப்போம் என்று கூறுவது தவறு இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை மோடியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். மன அதிருப்தியில் உள்ளனர்.  பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் குறை போக்கப்படவில்லை. கடும் குளிரில் அவர்கள் போராடி வருகின்றனர். உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிருப்தியில் உள்ள மக்கள் ராகுல் வருகையை எதிர்பார்க்கின்றனர். அவரது வருகை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் போன்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். 

சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் வருமா என்பதை விட அவர் நல்லபடியாக குணமடைந்து வரவேண்டும் என்பதே என் ஆசை. இவ்வாறு   அவர் கூறினார்.

பேட்டியின்  போது மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் சுதா ராமகிருஷ்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா,மண்டலத் தலைவர்கள் அயுப் அலி ,விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், திருச்செல்வம், மொடக்குறிச்சி ஞானசேகரன், பாபு என்கிற வெங்கடாசலம், மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்சா, நிர்வாகி முகமது அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Tags : congress EVKS Elangovan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT