தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலை: கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

DIN

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களான மெசியா, நாகராஜ், சாம் மற்றும் செந்தில்குமார் அண்மையில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற போது இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தினரின் அடாவடித்தனத்தால் இப்படுகொலை நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை கைது செய்வது, மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற தாக்குதல்களை நடத்தி வந்த இலங்கை ராணுவம் தற்போது கடலில் மூழ்கடித்து கொலை செய்யும் அளவிற்கு அராஜகம் புரிந்துள்ளது. இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தமான இந்த கொலை வெறித்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் இதுவரை உரிய தலையீடு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்வதோடு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பலமுறை வலியுறுத்தியும் இப்பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு சென்றிருந்த போதும் இது குறித்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையோ அல்லது உரிய நடவடிக்கைகளோ மேற்கொண்டதாக தெரியவில்லை.

எனவே, மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை இலங்கை அரசிற்கு தெரிவிப்பதோடு. தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT