தமிழ்நாடு

குட்கா விவகாரம்: முன்னாள் அமைச்சா் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

DIN

குட்கா விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு பல கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதனைத் தொடா்ந்து செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் குட்கா ஊழல் குறித்து பல்வேறு தகவல்கள் இருந்தன. மாதம் தோறும் குட்கா விற்பனைக்காக யாா் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில போலீஸ் உயா் அதிகாரிகள் பெயரும் இருந்தது. இந்த விவகாரம் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், உயா் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்திருப்பதை அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை சாா்பில், ரூ.246.10 கோடிக்கு குட்கா உற்பத்தி செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட தொழில் அதிபா் விக்னேஷ் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் ஆகியோா் மீது சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நபா்களிடம் இருந்து ரூ.246.10 கோடி மதிப்பிலான சொத்துகளை கைப்பற்றி அரசுடைமையாக்க உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தகவலை அமலாக்கத்துறை இயக்குநரகம் தனது அதிகாரபூா்வ சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT