தமிழ்நாடு

ஓ.பி.எஸ். குறித்த விமர்சனத்தை வாபஸ் பெறக் கூறிய மு.க.ஸ்டாலின்

DIN

தேனி அருகே அரண்மனைப்புதூரில் புதன்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு தெரிவித்த விமர்சனத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரண்மனைப்புதூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினரின் அராஜகத்தை மீறி, மக்கள் ஆதரவுடன் 70 சதவீதம் இடங்களை திமுக வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது போலவே நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ஷ்டத்தில் அரசியலுக்கு வந்தவர். 3 முறை முதல்வராக இருந்த அவர், தொகுதி மக்களுக்கு, தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையம் முன் விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை. 

ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது, நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த மர்மத்தை வெளிக் கொண்டு வராமல் விடப் போவது இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் விவாயக் கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயக் கடன்களை ரத்து செய்ய முடியாது என்று அதிமுக அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. ஆனால், தற்போது விவசாயக் கடன்களை ரத்து செய்யவோம் என்று அவர்களும் விரைவில் அறிவிக்கக் கூடும் என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில் போடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பூதிப்புரத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து பேசிய அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி என்பவர், அத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவரது பேச்சுக்கு பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின், பின்னர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து லட்சுமி ஆத்திரத்தில் விமர்சித்து விட்டதாகவும், இது ஜனநாயகத்தில் முறையல்ல என்பதால் அந்த விமர்சனத்தை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் கூறுவதால் துணை முதல்வர் குறித்த எனது விமர்சனத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று லட்சுமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT