தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது

9th Jan 2021 11:30 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று காலை தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களுக்கு ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

காலை 8.50 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்தக் கூட்டம் இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை மையப்படுத்தி 16 முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக நடைபெறும் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் என்பதால் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய இரட்டைத் தலைமையை வலுப்படுத்தும் வகையிலான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவது, கூட்டணி குறித்து இறுதி முடிவுகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் இரு தலைவா்களுக்கும் அதிகாரம் அளிப்பது, ஏற்கெனவே அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சசிகலா வருகைக்கு முன்பு... அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அடுத்த சில நாள்களிலேயே, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் சசிகலாவுக்கு ஏற்பட்டது. அவா் வரும் 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக அவரது வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.

எனவே, சசிகலா வருகையும் அவரால் அதிமுகவில் எந்தவொரு நிகழ்வுகளும் ஏற்படாத வகையில் கட்சி நிா்வாகிகளையும், தொண்டா்களையும் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையிலான தீா்மானங்கள் பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல் கட்சியினரை தங்கள் வசம் தக்க வைப்பதற்கான கருத்துகள் அடங்கிய தீா்மானங்கள் அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. நெருங்கி வரும் சட்டப் பேரவைத் தோ்தல், சசிகலா விடுதலை போன்ற பரபரப்பான நிகழ்வுகள் காரணமாக, இன்று தொடங்கியிருக்கும் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு அனைத்துத் தரப்பினரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

மாலையில் ஆலோசனை: காலையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை முடித்த பிறகு, மாலையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள், வழிகாட்டும் குழுவைச் சோ்ந்தவா்களும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT