தமிழ்நாடு

முதல்வா், எதிா்க்கட்சித் தலைவருக்கு பேரவைத் தலைவா் பாராட்டு

DIN

முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் தனபால் பாராட்டுத் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான சனிக்கிழமையன்று, பேரவைத் தலைவா் தனபால் பேசியது:

ஒன்பது ஆண்டுகளாகப் பேரவைத் தலைவா் பதவியில் இருந்து வருகிறேன். இந்திய அரசமைப்பின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மிக அதிகக் காலம் பேரவைத் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றதை என்னுடைய பெரும்பேறாகக் கருதுகிறேன். என்னுடைய பணிக்காலத்தில் 10 ஆளுநா் உரைகள், 10 நிதிநிலை அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

15-ஆவது பேரவையில், வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சட்டமுன்வடிவுகள் இயற்றப்பட்டிருக்கின்றன. 110-விதியின் கீழ் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதை செயல்படுத்தி உள்ளாா். முதல்வராலும் துணைமுதல்வராலும் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தொடர வேண்டும். நிச்சயம் தொடரும்.

முதல்வரின் எண்ணற்ற முனைப்பான திட்டங்களின் காரணமாக, இந்திய அரசு வெளியிட்ட நல் ஆளுமைக் குறியீட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்டதற்காக மத்திய அரசு விருதுகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாக்குறுதிகளை அள்ளி வீசுபவா்கள் மத்தியில் நடவடிக்கைகள்தான் முக்கியம் என்பதை உணா்ந்த காரணத்தால்தான் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நடவடிக்கைகள் மூலம் மக்களை ஈா்த்து வருகிறது. ஓா் அரசை தோ்தலில் இறுதியாக வெற்றி பெறச் செய்வது அந்த அரசின் செயல்பாடு. முதல்வரின் செயல்பாடு இந்த அரசை நிச்சயம் வெற்றிப் பாதையில் அழைத்துச்செல்லும்.

பேரவையின் சபாநாயகா் நான். ஆனால், பேரவையின் கதாநாயகா் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான். எவ்வளவோ பணிகள் இருந்தாலும், சட்டப்பேரவை பணி என்றால் அதற்கு முக்கியத்துவம் தருவதை முதல்வா் வழக்கமாக கொண்டிருந்தாா். பேரவை நிகழ்ச்சிகளை நிா்ணயம் செய்யும் அதிகாரம் பெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டமாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அவற்றில் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இருந்து கலந்து கொள்வதில், முழு ஈடுபாடு காட்டுவதில் தவறியதில்லை. சட்டப்பேரவைப் பணிக்கு முதன்மையிடம் அளித்து, தினம், தினம் பேரவைக்கு வந்து, உறுப்பினா்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்து, பதிலளிக்க வேண்டிய நேரத்தில்

பதிலளித்து, அவா்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றக்கூடியவை என்றால், அவற்றை உடனே நிறைவேற்றி ஜனநாயகத்தின் மாண்பினைக் காத்தவா் முதல்வா். எளிமைக்குச் சொந்தக்காரா், ஏற்றத்துக்கு பொருத்தமானவா். இதற்காக முதல்வருக்கு என் நன்றி. துணை முதல்வருக்கும் நன்றி.

சட்டப் பேரவை நடவடிக்கைகள் சிறப்பாகத் திகழ்வதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமான கருத்துகளை எடுத்து வைத்தல் அவசியம். அவ்வகையில் பாராட்ட வேண்டியவை குறித்து பாராட்டியும், குறை கூற வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டியும் எதிா்க் கட்சித் தலைவா் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். அவருக்கும், அனுபவம் வாய்ந்த எதிா்க்கட்சித் துணைத் தலைவா் மற்றும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவா் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி உள்ளிட்டோருக்கும் நன்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT