தமிழ்நாடு

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிப்.21 முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு

20th Feb 2021 03:23 PM

ADVERTISEMENT

 

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை (பிப். 21) முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1962ஆம் ஆண்டு களக்காடு புலிகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டு சரணாலயங்களும் இணைக்கப்பட்டு, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகமாக ஆக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 1,601 சதுர கிலோ மீட்டர். இதில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அடர்ந்த காடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாகத் திகழும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, அம்பாசமுத்திரம், முண்டந்துறை, பாபநாசம், கடையம் வன சரகங்கள் உள்ளன. 

ADVERTISEMENT

ஆண்டுதோறும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஜனவரியில் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிகழாண்டு கரோனாத் தாக்கத்தால் பிப்ரவரியில் நடைபெறுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் கோட்டத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்குப் பயிற்சி நடைபெற்றது. அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய நான்கு வனச்சரகங்களுக்கு உள்பட்ட 29 பீட்களில் 58 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் 110 வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். 

பிப். 21 முதல் பிப். 26 வரை ஆறு நாள்கள் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் முதல் மூன்று நாள்கள் மாமிச உண்ணி மற்றும் தாவர உண்ணிகள் குறித்தக் கணக்கெடுப்பும், அடுத்த மூன்று நாள்கள் நேர்கோட்டு முறையில் விலங்குகளின் பாதைகளில் காணப்படும் தடங்கள், எச்சங்கள் மூலம் விலங்குகள் கணக்கெடுப்பும் நடைபெறுகின்றன. 

முண்டந்துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியில் சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் ஆகியோர் வனத்துறை ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில் பாபநாசம் வனச்சரகர் பரத், பயிற்சி வனச்சரகர் சிவா, வனவர்கள் ஜெகன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT