தமிழ்நாடு

மானாமதுரையில் கெளுத்தி மீன்கள் விற்பனை அமோகம்: ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்

21st Apr 2021 01:26 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்மாய்கெளுத்தி மீன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த மீன்களை கூடுதல் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

மானாமதுரை பகுதிக்கு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், சாயல்குடி போன்ற கடற்கரைப் பகுதிகளில் பிடிக்கப்படும் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லரை வியாபாரிகள் இந்த மீன்களை கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விலையில் விற்பனை செய்து லாபம் பார்ப்பார்கள்.

கடல் மீன்களை அனைத்து நாள்களிலும் குழம்பு வைத்து சாப்பிடலாம். ஆனால் நாவிற்கு ருசியான கண்மாய் கெளுத்தி மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் மட்டுமே முடியும். கிராமங்களில் கண்மாய்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வளரும் கெளுத்தி மீன்களை குறிப்பிட்ட சில நாள்கள் மட்டுமே பிடித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

ADVERTISEMENT

அதன்படி தற்போது மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கண்மாய் கெளுத்தி மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் கெளுத்தி மீன் வியாபாரிகள் இருசக்கர வாகனங்களில் கெளுத்தி மீன்களை வைத்துக்கொண்டு விற்பனைக்கு வந்து விடுகின்றனர். இவர்கள் ஓரிடத்தில் நின்று கெளுத்தி மீன்கள் என்று கூவி விற்பனையை தொடங்கியதும் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிடுகிறது.

பின்னர் வியாபாரி கூறும் விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் எப்போதாவதுதானே இந்த மீனை சாப்பிட முடியும் என எண்ணி பொதுமக்கள் இந்த கெளுத்தி மீன்களை குழம்பு வைக்க அரைக்கிலோ, ஒரு கிலோ என தங்கள் கையில் உள்ள பணத்தின் இருப்பை பொருத்து வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து கெளுத்தி மீன்கள் விற்பனை செய்த வந்த சிவகங்கை பகுதியைச் சேர்ந்த மந்தக்காளை கூறியதாவது: 

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராம கண்மாயிலிருந்து பிடிக்கப்படும் கெளுத்தி மீன்களை மொத்தமாக வாங்கி வந்து மானாமதுரை பகுதியில் கடை வீதிகளில் நின்று சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூபாய் 500 வரை விற்பனை செய்தோம். தற்போது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ரூ.350 லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்கிறோம். ஆண்டு முழுவதும் கிடைக்காத மீன் என்பதால் வாடிக்கையாளர்களும் பேரம் பேசாமல் நாங்கள் சொல்லும் விலைக்கு கெளுத்தி மீன்களை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

Tags : மானாமதுரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT