தமிழ்நாடு

கல்லுாரி மூடப்பட்டதால் குடும்பத்தினருடன் விவசாயத்தில் இறங்கிய மாணவி

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வி.மன்னார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, ஓராண்டாக கல்லுாரி மூடிக்கிடப்பதால், இணையவழியில் படித்துத் தேர்வெழுதி வரும் இவர், குடும்பத்தினருடன் இணைந்து குத்தகைக்கு நிலம் பிடித்து ஆர்வத்தோடு விவசாயம் செய்து வருகிறார். 

குளுமையான தட்பவெப்பநிலை நிலவும் மலைக் கிராமங்களில் மட்டுமே விளையும் ஆங்கில காய்கறியான முட்டைகோஸ் சோதனை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். 

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்தாண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து பள்ளி, கல்லுாரிகளும் மூடப்பட்டன. கல்லுாரி மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுவதோடு, தேர்வுகளும் இணைய வழியிலேயே நடைபெற்று வருகின்றன.

இதனால், பாடம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட நேரங்களை தவிர, பெரும்பாலான நேரங்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள மாணவ–மாணவியர், செல்லிடப்பேசிகள், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். வெகு சிலர் மட்டுமே, பெற்றோர்களின் தொழில், வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட பணிகளில்  பங்கெடுத்துக் கொண்டு துணையாக இருந்து வருகின்றனர்.

இதில், வாழப்பாடி அருகே தனியார் கல்லுாரி மாணவி ஒருவர், குடும்பத்தினருடன் இணைந்து, விவசாய நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து ஆர்வத்தோடு விவசாயம் செய்து, குளுமையான தட்பவெட்பநிலை நிலவும் மலை கிராமங்களில் மட்டுமே விளையும் ஆங்கில காய்கறியான முட்டைகோஸை சோதனை முறையில் பயிரிட்டு அறுவடை செய்து மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
வாழப்பாடி அடுத்த வி.மன்னார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி(52). இவரது மனைவி செல்வி(45). இத்தம்பதியருக்கு, தமிழ்ச்செல்வன், தமிழரசு ஆகிய இரு மகன்களும், தமிழரசி என்ற ஒரு மகளும் உள்ளனர். தமிழ்ச்செல்வன் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டுப் பெற்றோருடன் விவசாயம் செய்து வருகிறார். தமிழரசு ஆத்துார் அருகிலுள்ள தனியார் கல்லுாரியில் இளநிலை கணினி அறிவியலும், தமிழரசி, வாழப்பாடி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் இளநிலை வணிகவியலும் படித்து வருகின்றனர்.

கல்லுாரிகள் இணைய வழியில் நடத்தும் பாடத்தைக் கற்றுக்கொண்டு தேர்வெழுதி பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவரும் மாணவி தமிழரசி, எஞ்சிய நேரங்களில் பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகள் மற்றும் விவசாயப்பணிகளுக்கு உதவி வந்தார். இந்நிலையில், பெற்றோர், சகோதரர்களுடன் இணைந்து, குத்தகைக்கு விவசாய நிலத்தை பிடித்து, இப்பகுதியில் விளைவிக்கப்படாத ஆனால் மக்கள் விரும்பி கொள்முதல் செய்யும் ஆங்கில காய்கறிகளை பயிரிட்டு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க முடிவு செய்தார். இதற்கு இவரது பெற்றோர் மட்டுமின்றி சகோதரர்களும் பச்சைக்கொடி காட்டினர்.

இதனையடுத்து, அருகிலுள்ள பொன்னாரம்பட்டி பரவக்காடு கிராமத்தில் ஒரு இரு ஏக்கர் விவசாய நிலத்தைப் பெற்றோர்கள் வாயிலாக குத்தகைக்கு பிடித்து, குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காணப்படும் கொடைக்கானல், உதகமண்டலம், சத்தியமங்கலம், ஒசூர், சூளகிரி, தாளவாடி உள்ளிட்ட பகுதி மலை கிராமங்களில் மட்டுமே பயிரிடப்படும் முட்டைக்கோஸ் நாற்றுகளை வாங்கி வந்து, குடும்பத்தினருடன் இணைந்து ஒன்னரை ஏக்கர் பரப்பளவில் சோதனை முறையில் பயிரிட்டார். தொடர்ந்து 70 நாள்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறையாக பராமரித்ததால், முட்டைக்கோஸ் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. 

இவற்றை அறுவடை செய்து தரம்பிரித்து உள்ளூர் தினசரி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறார். இந்த மாணவியின் முயற்சியால் இவரது குடும்பத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. 
பெற்றோரின் உழைப்பில் கிடைக்கும் வருவாயைச் செலவழித்துக் கொண்டு பொழுதை வீணாகக் கழித்து வரும் இளைஞர்களுக்கு மத்தியில், கல்லுாரியில் படித்து கொண்டிருக்கும் போதே குடும்பத்தினருடன் இணைந்து ஆர்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டதோடு, குளுமையான பகுதியில் மட்டுமே பயிரிடப்படும் ஆங்கில காய்கறியான முட்டைகோஸை சோதனை முறையில் பயிட்டு, வெற்றிகரமாக அறுவடை செய்து, குடும்பத்திற்கு கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய தனியார் கல்லுாரி மாணவி தமிழரசிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவி தமிழரசி நமது நிருபரிடம் கூறியதாவது:

விவசாய குடும்பத்தில் பிறந்த நான் வாழப்பாடி அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். கரோனா பரவலைத் தடுக்க கல்லுாரி மூடப்பட்டு ஓராண்டுக்கு மேலாக இணையவழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெற்றோர், சகோதரர்களுடன் இணைந்து குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறேன். எங்களது பகுதியில் பயிரிடப்படாத முட்டைகோஸை சோதனை முறையில் பயிரிட்டு, வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளோம். கடைசி நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மகசூல் குறைந்து விட்டது. இருப்பினும், வழக்கமாக பயிரிடப்படும் காய்கறிகளுக்கு மாற்றாக, சோதனை முறையில் முட்டைகோஸ் பயிரிட்டதால் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மனதிற்கு மகிழ்ச்சியும், விவசாயத்தில் வருவாய் ஈட்டமுடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT