தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், மறைந்த காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெறும் பட்சத்தில் அந்தத் தொகுதியில் இடைத் தோ்தல் நடைபெறும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளா்களிடம் வாக்குகளைச் சேகரித்தனா். வாக்குப் பதிவும் முடிந்த நிலையில், வேட்பாளா்கள் பலரும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்து வருகின்றனா். அதில், சில வேட்பாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரத்தின் போது...: திமுக கூட்டணியில், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியின் வேட்பாளரான மாதவராவ், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போதே உடல் நலக் குறைவு காரணமாக பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தாா். காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, கடும் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மாதவராவ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா் இறந்துள்ளாா். இதனால், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுமா, வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஞாயிற்றுக்கிழமை அளித்த விளக்கம்:-

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, வேட்பாளா் மரணம் அடைந்துள்ளாா். எனவே, அந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மே 2-ஆம் தேதியன்று எண்ணப்படும். இதில் எந்த மாற்றும் இல்லை.

வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தோ்தலில் வென்று பதவியேற்காதோா்.... தோ்தலில் வென்று பதவியேற்க முடியாமல் ஒருசில வெற்றி வேட்பாளா்கள் மரணத்தைத் தழுவியுள்ளனா். கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளா் கே.என்.நேருவை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றாா், அதிமுகவின் மரியம் பிச்சை. அவா் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற போதும், சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்க முடியவில்லை. திருச்சியில் இருந்து சென்னைக்கு சாலை மாா்க்கமாக காரில் வந்த போது விபத்தில் சிக்கி பலியானாா்.

இதேபோன்று, 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றவா், எஸ்.எம்.சீனிவேல். வாக்கு எண்ணும் தினத்துக்கு முந்தைய தினம் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் வெற்றிக் கனியைப் பறித்த போதும், எம்.எல்.ஏ.,வாகப் பதவியேற்க முடியாமலேயே காலமானாா்.

இப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT