தமிழ்நாடு

3 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது வீராணம் ஏரி

12th Apr 2021 08:31 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியைச் சுற்றி தடுப்புக் கட்டைகள் கட்டுவதற்கும், தூர் வாருவதற்கு ஏதுவாகவும் அணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டது. இதனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வீராணம் ஏரி வறண்டது.
 கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிகப் பெரிய ஏரியாக வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 18 கி.மீ. நீளமும், 8 கி.மீ. தொலைவு அகலமும் கொண்டது. ஏரியின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 47.50 அடி. ஏரியில் 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
 இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 27 கிளை வாய்க்கால்கள் மூலம் சுமார் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.
 மேலும், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, திருச்சினபுரம், கந்தகுமாரன், மானியம் ஆடூர், வெய்யலூர், வாழைக்கொல்லை, சித்தமல்லி, அகர புத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் வசிக்கும் உள்நாட்டு மீனவர்கள் ஏரியின் மூலம் மீன்பிடித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றனர்.
 இதற்காக மீன் வளத் துறை மூலம் பல லட்சக்கணக்கில் மீன் குஞ்சுகள் ஏரியில் விடப்படுகின்றன.
 ஆண்டுதோறும் வடவாறு வழியாக தண்ணீர் வரப்பெற்று ஏரியில் தேக்கப்பட்டு, மீன்வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன.
 இறந்து மிதக்கும் மீன் குஞ்சுகள்: நிகழாண்டு வீராணம் ஏரியில தடுப்புக் கட்டைகள் கட்டுவதற்காகவும், ஏரியைத் தூர் வாரவும் அணையிலிருந்து வடவாறு வழியாக வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், ஏரி வறண்டு காணப்படுகிறது.
 ஏரிக்குள் உள்ள சிறு சிறு குட்டைகளில் இயற்கையாகவே உள்ள மீன் குஞ்சுகள் அதிகம் காணப்படும். தண்ணீர் வற்றுவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்த மீன் குஞ்சுகளை மீனவர்கள் பிடிக்கக் கூடாது என மீன்வளத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.
 தற்போது வெயிலின் தாக்கத்தால் இந்த மீன் குஞ்சுகள் இறந்து தண்ணீரில் மிதக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
 இதனால், காட்டுமன்னார்கோவில் - சேத்தியாத்தோப்பு வரை வீராணம் ஏரிக்கரை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 மீன் பிடிக்க விரைவில் அனுமதி கிடைக்கவில்லையெனில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT