தமிழ்நாடு

இளையான்குடியில் கிசான் திட்ட முறைகேடு: பணத்தைப் பெற நடவடிக்கை

29th Sep 2020 03:54 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற விவசாயிகளிடமிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

மேலும் பணத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளையான்குடி வட்டத்தில் 5 வருவாய் பிர்க்காக்கள் உள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

போலியான ஆவணங்களைப் பதிவு செய்து விவசாயிகள் முறைகேடாக வங்கிக் கணக்கு மூலம் பணத்தைப் பெற்று வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திரும்பப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களிலும் விவசாயிகள் முறைகேடு செய்து கிசான் திட்டத்தில் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் பிர்க்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் திட்டத்தில் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள்  சாலைக்கிராமத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைத்துள்ள கணக்குகளில் பணம் வரவு கொடுக்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவ்வாறு ரூ 20 லட்சம் வரை இளையான்குடி ஒன்றியத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் வரவு கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கிசான் திட்டத்தில் பணம் பெற்ற விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களில் பலரிடம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் மற்ற விவசாயிகளிடமும் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண்மை விரிவாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT