தமிழ்நாடு

ராமேசுவரம் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட கேரள விசைப் படகுகள்: மீனவர்கள் கடும் எதிர்ப்பு

29th Sep 2020 05:00 AM

ADVERTISEMENT


ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு 40 - க்கும் மேற்பட்ட கேரள  விசைப்படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த படகுகள் இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 850 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதை நம்பி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேர் உள்ளனர்.   ராமேசுவரத்திலிருந்து இந்திய எல்லை 12 கடல் மைல் தொலைவு மட்டுமே உள்ளது. இதைத் தாண்டினால் இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு வந்து விடும். 

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில், அந்நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க  அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.  இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மட்டும் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்  சம்பவங்களால் தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். சில படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிக்கு வந்த பின்னர், அந்நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

ADVERTISEMENT

இந்நிலையில், கேரளத்திலிருந்து 40 - க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு மீன்பிடிப்புக்காக சில மீனவர்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. 

ராமேசுவரத்தைப் பொருத்தமட்டில் 35 அடி நீளமும், 15 குதிரைத் திறன் கொண்ட என்ஜின் பொருத்திய படகுகள் மட்டுமே மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகள் சுமார் 70 அடி நீளமும், 30 குதிரைத்திறன் கொண்டதாக உள்ளன.  இந்த படகுகள் கடலில் தவறுதலாக எல்லை தாண்டும் பட்சத்தில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம் என்றும், இதனால் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளும் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதனால் கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகளை, ராமேசுவரம் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என மீனவர்கள் மீன்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுதொடர்பாக மீனவர் சங்க பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தமிழக அரசு மற்றும் மீள்வளத்துறை அமைச்சர், செயலர், இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது: ராமேசுவரத்தில்  ஏற்கெனவே சேதமடைந்த படகுகளில் உள்ள அரசுப் பதிவு எண்களை முறைகேடாக கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகளில் பதிவிடவும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த படகுகளுக்கு மீன்வளத்துறையினரிடம் அனுமதி வாங்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT