தமிழ்நாடு

கரோனா தடுப்புப் பணிகள்: சென்னையின் 15 மண்டல சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

26th Sep 2020 06:48 PM

ADVERTISEMENT

சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதியில் கரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலாளர் க.சண்முகம், தலைமையில் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டுமெனவும், நோய்த் தொற்று சதவிகிதம் 5 சதவிகிதத்திற்குக் கீழ் குறைத்திடத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி பரிசோதனை மேற்கொண்டு, நோய்த் தொற்றை கண்டறிய வேண்டுமெனவும், நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், கரோனா நோய்த் தொற்று எதனால் வருகிறது, எப்படி மற்றவர்களுக்கு தொற்றாக மாறுகிறது என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், கொரோனா நோய்த் தொற்று, முகக்கவசம் அணியாததால் ஏற்படுகிறதா? தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் ஏற்படுகிறதா? என்பதை ஆராய்ந்து அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென தலைமைச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

மார்க்கெட் பகுதி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் இடங்கள் போன்ற பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை பொதுமக்களும், பணியாளர்களும் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதோடு நோய்த் தொற்று பரவுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா நோய்த் தொற்று அதிகமாகவுள்ள பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதனைக்குட்படுத்தி, நோய்த்தொற்று இருப்பின் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT