தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.62 அடியாக உயர்வு

25th Sep 2020 09:29 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.62 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வரத்து காரணமாக கடந்த 21 ஆம் தேதி காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 99.62 அடியாக உயர்ந்தது. 

கடந்த நான்கு நாள்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. கடந்த இரு நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பும் வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீர் வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் வரத்து திடீரென சரிந்தால் மீண்டும் அணையின் நீர்மட்டம் 100 அடியாவது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆகஸ்ட் 21 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.81 அடிவரை உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியாகும் முன்பாக நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டமும் சரிந்தது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.62 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 35,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.34 டி.எம்.சியாக உள்ளது.

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT